தேர்தல் களத்தில் விஜய் மக்கள் இயக்கம்…தந்தைக்கு எதிரான வழக்கு செப்.27இல் விசாரணை!

நடிகர் விஜய் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாயார் ஷோபா உள்ளிட்டோருக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

கடந்தாண்டு நவம்பர் மாதம் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்கிற கட்சி தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதன் தலைவராக பத்மநாபன், பொதுச் செயலாளராகத் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், பொருளாளராக தாயார் ஷோபா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதைக் கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அரசியலுக்கு விஜய் வந்துவிட்டார் என இணையவாசிகள் ட்ரெண்ட் செய்ய தொடங்கிய சிறிது நேரத்திலே, இந்த கட்சி அறிவிப்புக்கு விஜய் தரப்பில் கடுமையான மறுப்பு தெரிவிக்கப்பட்டது.தனக்கும் இதற்கும் தொடர்பே இல்லை என்று விஜய் தரப்பில் கூறப்பட்டது. 

பெயரை பயன்படுத்த மறுப்பு
இந்நிலையில்தான், தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவோ, வேறு செயல்களில் ஈடுபடவோ தந்தை, தாய் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்குத் தடை விதிக்கக் கோரி, கடந்த ஏப்ரலில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார். 
கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி தொடரப்பட்ட இந்த வழக்கு ஆகஸ்ட் 23ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் எதிர் மனுதாரர்களில் 6 பேருக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா, முத்து ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய் தரப்பில் வழக்கறிஞர் எவரும் ஆஜராகாததால் விசாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், பதில் மனுக்களைத் திருப்பி அளித்த நீதிபதி, விசாரணையைச் செப்டம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததோடு, அன்றைய தினமே பதில் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

தேர்தல் களத்தில் விஜய் மக்கள் இயக்கம்
தற்போது நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிட நடிகர் விஜய்யிடம் அனுமதி கோரியதாகவும், அதற்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் விஜய் அனுமதியுடன் சுயேச்சையாகக் களமிறங்கவுள்ளனர்.

ஆனால் விஜய் நேரடியாக எங்கும் பிரச்சாரங்கள் செய்ய மாட்டார். புகைப்படம், கொடியைப் பிரச்சாரத்தில் பயன்படுத்த மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actor vijay case against sa sekar

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com