நீட் மருத்துவ நுழைவுத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சில நாள்கள் கழிந்துள்ளது. இந்நிலையில், இத்தீர்மானத்தை நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வரவேற்றுள்ளார்.
அப்போது, “கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள் மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்” என வலியுறுத்தினார். சமீபத்தில் நடைபெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களை கவுரவிக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் புதன்கிழமை (ஜூலை 3 2024) சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண் விஜய், “நீட் தேர்வில் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். நாட்டிற்கு நீட் தேவையில்லை. நீட் தேர்வில் இருந்து விலக்கு மட்டுமே ஒரே தீர்வு. மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை நான் முழுமனதுடன் வரவேற்கிறேன். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கல்வியை கன்கரண்ட் லிஸ்டில் இருந்து மாநிலப் பட்டியலின் கீழ் கொண்டு வர வேண்டும்” என்றார்.
மேலும், “இடைக்காலத் தீர்வாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தியமைத்து ‘சிறப்பு கூட்டுப் பட்டியல்’ உருவாக்கி, அதன் கீழ் கல்வி மற்றும் சுகாதாரம் சேர்க்கப்பட வேண்டும்” என்றார்.
மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட்) நடத்துவதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் நடிகர் விஜய்யிடம் இருந்து இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.
பா.ஜ.க. கண்டனம்
இந்த நிலையில் நடிகர் விஜய் பேச்சுக்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பா.ஜ.கவின் கரு. நாகராஜன், “நீட் தேர்வை எதிர்க்கும் கட்சிகளுடன் விஜய் கைகோர்த்துள்ளார்” என்றார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை, “நீட் தேர்வு ரத்தானால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இது மாணவர்களுக்கான பிரச்னை. ஆனால் இதனை நீங்களெல்லாம் பா.ஜ.க பிரச்னை போல் பேசுகிறீர்கள்” என்றார். தொடர்ந்து, “நீட் மாணவர்களுக்கு நன்மை பயக்கும் திட்டம்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.