234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு கடந்த மாதம் 17 ஆம் தேதி சென்னையில், தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்கி விஜய் பாராட்டு தெரிவித்தார். அப்போது திட்டமிட்ட நேரத்தை விட 10 மணி நேரத்திற்கும் மேலாக நடந்ததால், விஜயால் அன்றைய தினம் நிர்வாகிகளை சந்திக்க முடியவில்லை.
இந்தநிலையில், விழாவினை ஒருங்கிணைத்த நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவிப்பதுடன், அடுத்தகட்ட நகர்வு குறித்து ஆலோசிக்கும் வகையில், சென்னை அருகே பனையூர் இல்லத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தின் 234 தொகுதியைச் சேர்ந்த தனது மக்கள் இயக்கப் பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் ஆலோசிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இதையும் படியுங்கள்: மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மட்டுமே அ.தி.மு.க-வில் மீண்டும் இடம்: இ.பி.எஸ் அறிவிப்பு
இதனையடுத்து, இன்று முதற்கட்டமாக திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், தேனி, சேலம், கோவை, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர், செயலாளர் என 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை விஜய் சந்தித்தார்.
கல்வி உதவி வழங்கும் விழா வெற்றிக்கரமாக நடந்ததை முன்னிட்டு நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து, மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகள் மற்றும் அவர்களது குடும்ப நலம் குறித்து இந்தக் கூட்டத்தில் விஜய் கேட்டறிந்தார். பின்னர் அவர்களுடன் சேர்ந்து புகைப்படங்களுடன் எடுத்துக்கொண்டார்.
இதுகுறித்து இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகளில் சிலர் தெரிவித்ததாவது; கல்வி உதவி வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றதை முன்னிட்டு மேலும் தங்களை ஊக்குவிக்கும் வகையில் இன்று அழைத்து பேசினார். விஜய் எங்களுடன் குடும்பமாக தான் பழகி வருகிறார். விழா முடிந்தது அவ்வளவுதான் என்று நினைக்காமல், அதை ஒருங்கிணைந்த நிர்வாகிகள் அழைத்து நன்றி தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழக மக்களுக்கு இயக்கம் மூலம் தொடர்ந்து உதவிகளை செய்ய வலியுறுத்தினார். அப்படி உதவி செய்வதற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள் என்று கூறினார், என நிர்வாகிகள் சிலர் கூறினர்.
விஜய் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. லியோ படத்திற்கு பிறகு நான் நடிக்கமாட்டேன் என்று அவர் கூறியதாக பரவும் தகவும் போலியானது என ஒரு நிர்வாகி கூறினார்.
அதேநேரம், அரசியலில் இறங்குவது என்றால் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று எங்களிடம் தெரிவித்துள்ளார். முழுமையாக அரசியலில் ஈடுபடுவேன் எனவும் கூறியுள்ளார். அரசியலைப் பொருத்தவரை அஜித் ரசிகர்கள், ரஜினிகாந்த் ரசிகர்கள் என அனைத்து ரசிகர்களின் ஆதரவும் எங்களுக்கு இருக்கிறது. அரசியல் குறித்து பல விஷயங்களை எங்களிடம் விஜய் கூறியுள்ளார். அவை அனைத்தையும் எங்களால் வெளியே சொல்ல முடியாது. விஜய் சினிமாவில் இருந்து இரண்டு ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஓய்வெடுக்கிறார் என்ற செய்தி மகிழ்ச்சியைக் கொடுத்தது. அது ஏன் என்று எங்களுக்கு தெரியும். மக்கள் இயக்கத்தை தொடர்பு கொள்ளும் போது அதிகாரப்பூர்வமாக தகவல் வரும் வரை காத்திருங்கள் என்று கூறினர், என சில நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும் இளம் வாக்களர்களை கவரக்கூடிய வகையில் அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்றும் இந்தக் கூட்டத்தில் விஜய் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil