நடிகர் விஜய் ஒருபோதும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது என அமைச்சர் ஜெயகுமார் கூறினார். மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மனா? செஞ்சிக் கோட்டை ஏறியவர்கள் எல்லாம் தேசிங்கு ராஜாவா? என அவர் கேள்வி எழுப்பினார்.
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், சனிக்கிழமை (இன்று) வ.உ.சிதம்பரனார் 149ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘கப்பலோட்டிய தமிழன், கப்பலோட்டிய இந்தியன் என்ற அளவில் தமிழனுக்கும் இந்தியனுக்கும் பெருமை சேர்த்தவர் வ.உசி. அவரை நினைவு கூர்வது நமது கடமை.’ என்றார்.
நடிகர் விஜயை எம்.ஜி.ஆராக சித்தரித்து மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘கப்பல் ஓட்டுபவர்களெல்லாம் வ.உ.சி.யாக முடியாது. மீசை வைத்தவர்களெல்லாம் கட்டபொம்மனாகிவிட முடியாது. செஞ்சிக்கோட்டை ஏறியவர்கள் எல்லாம் ராஜாதேசிங்கு ஆகிவிட முடியாது. நடிகர் விஜயால் எம்.ஜி.ஆரின் இடத்தை நிரப்ப முடியாது’ என்று பதில் அளித்தார் அமைச்சர்.
தொடர்ந்து, ‘சசிகலா விடுதலை குறித்து கேட்கிறீர்கள். சசிகலாவின் தலையீடு அதிமுகவில் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. அரசின் நிர்வாக காரணங்களுக்காவே இராமநாதபுரம் எஸ்.பி.வருண்குமார் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். எந்த அழுத்தமும் எங்களை நிர்பந்திக்க முடியாது.
கூட்டணி குறித்து அமைச்சர்கள் பேசக்கூடாது என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் எங்களுக்கு கட்டளையிட முடியாது. கூட்டணி தர்மத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.’ என குறிப்பிட்டார் அமைச்சர் ஜெயகுமார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"