scorecardresearch

வரி செலுத்துகிறேன்; நீதிபதியின் கருத்தை நீக்குங்கள்; நடிகர் விஜய் மேல்முறையீடு

Actor Vijay re appeals madras high court statement and fine: சொகுசு கார் வழக்கில் வரி செலுத்துவதாகவும், தன்னை பற்றிய கருத்துக்களை நீக்கவும், அபராதத்தை ரத்து செய்யவும் நடிகர் விஜய் மேல்முறையீடு

சொகுசு கார் வரி தொடர்பான வழக்கில், தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்களை நீக்கக் கோரி நடிகர் விஜய் மேல்முறையீடு செய்துள்ளார்.

நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற காரை இறக்குமதி செய்தார். அந்த காருக்கு இறக்குமதி வரியாக ரூ.1,88,11,045 செலுத்தியுள்ளார். பின்னர் அந்த காரை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய சென்றபோது, நுழைவு வரி செலுத்ததால் காரை பதிவு செய்ய முடியவில்லை. மேலும் நுழைவு வரி செலுத்தினால் மட்டுமே அதை வாகனப் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியும் என்று வணிகவரித்துறை உதவி ஆணையர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் காருக்கு இறக்குமதி வரி செலுத்திவிட்டேன் ஆனால் நுழைவு வரி செலுத்தினால் மட்டுமே, பதிவு செய்ய முடியும் என்பதால், அந்த காரை பயன்படுத்த முடியவில்லை. எனவே இது தொடர்பாக, வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் வணிகவரித்துறை உதவி ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

விஜய் தொடர்ந்த இந்த வழக்கில், 20 சதவீதத்தை செலுத்திவிட்டு வாகனத்தை பதிவுசெய்ய இடைக்கால உத்தரவு 2012 ஜூலை 17 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. அதன்படி 2012 ஜூலை 23 ஆம் தேதி  20 சதவீதத்தை செலுத்திவிட்டு, ரோல்ஸ் ராய்ஸ் காரை பதிவு செய்து பயன்படுத்தி வருகிறார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, நடிகர் விஜய் 2 வாரங்களில் வரி செலுத்த உத்தரவிட்டார். மேலும், வழக்கு தொடர்ந்ததற்காக 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்து அதை முதல்வரின் நிவாரண நிதிக்கு இரண்டு வாரங்களில் செலுத்த உத்தரவிட்டுள்ளார்.

விசாரணையின்போது நீதிபதி, மனுதாரரின் வழக்கறிஞரிடம், மனுதாரர் செய்ய வேலை செய்கிறார் என கேட்டார். அதற்கு வழக்கறிஞர், அவர் நடிகராக இருக்கிறார் என பதிலளித்தார். புகழ் பெற்ற சினிமா நடிகர்கள், முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும். வரி வருவாய் தான் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. வரி என்பது கட்டாயமாக வழங்க வேண்டிய கட்டாய பங்களிப்பு தானே தவிர தானாக வழங்க கூடிய நன்கொடை இல்லை. பொதுமக்கள் செலுத்தகூடிய வரி வருவாய் தான், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. என நீதிபதி அறிவுறுத்தினார்.

சட்டபூர்வமான குடிமகனாக நடந்துகொள்வதற்கும், வரி செலுத்துவதற்கும், சமூகத்தில் சமூக நீதியை அடைவதற்கு கடுமையாக வளரவும் சாமானிய மக்கள் உந்துதல் மற்றும் ஊக்குவிக்கப்படுகையில், பணக்காரர், வசதி படைத்தவர்கள் மற்றும் புகழ்பெற்ற நபர்கள் வரி செலுத்தத் தவறிவிடுகின்றனர், என்று நீதிபதி கூறினார்.

மனுதாரர் நுழைவு வரி செலுத்தாததை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ள நீதிபதி, டிக்கெட்டுக்கு பணம் செலுத்தி தனது திரைப்படங்களைப் பார்க்கும் அவரது லட்சக்கணக்கான ரசிகர்களின் உணர்வுகளை நடிகர் மதிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் நடிகர்கள் நாடாளும் அளவிற்கு வளர்ந்துள்ள நிலையில், அவர்கள் உண்மையான நாயகர்களாக இருக்க வேண்டுமே தவிர, போலி நாயகர்களாக இருக்க கூடாது சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களின் திரைப்படங்கள் சமூகத்தில் ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிரானவை. வரி ஏய்ப்பு என்பது ஒரு தேசிய விரோத பழக்கம், அணுகுமுறை மற்றும் மனநிலை மற்றும் அரசியலமைப்பிற்கு முரணானது என்று கருதப்பட வேண்டும். எனவே இறக்குமதி செய்யப்பட்ட காருக்கான வரியை இரண்டு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கு சமூக வலைதளங்களில் விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் வெளிவந்தன.

இந்நிலையில், 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு செய்துள்ளார். அதில், வாகன நுழைவு வரி பாக்கியை செலுத்த தயாராக இருப்பதாகவும், அதேசமயம் தன்னை பற்றி தீர்ப்பில் பதிவு செய்த விமர்சனங்களை நீக்கக் கோரியும், அபராதத்தை ரத்து செய்யக் கோரியும் நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Actor vijay re appeals madras high court statement and fine