நடிகர் விஜய், தனது பெயரை அரசியலில் பயன்படுத்தும் தந்தை எஸ்.ஏ சந்திரசேகரை மீண்டும் எச்சரித்துள்ளார்.
சனிக்கிழமையன்று, நடிகர் விஜய்யின் வழக்கறிஞர் எஸ்.குமரேசன் எஸ்.ஏ சந்திரசேகருக்கு பப்ளிக் நோட்டிஸ் ஒன்றை அனுப்பினர். அதில்,"சந்திரசேகர் மற்றும் அவரது விஜய் மக்கள் இயக்கம், செயல்பாடுகள் மூலம் ஏற்படும் எந்தவொரு விளைவிற்கும் தனது கட்சிக்காரர் பொறுப்பேற்க மாட்டார்" என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் ,"தனது கட்சிக்காரரின் (நடிகர் விஜய்) ஒப்புதலின்றி, ஜூன் 8, 2020 அன்று 'அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் அரசியல் கட்சியும், 'விஜய் மக்கள் இயக்கம்' என்ற அமைப்பையும் அவரின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் பதிவு செய்தார்.
நவம்பர் 5, 2020 அன்று விஜய் செய்திக் குறிப்பின் மூலம் , “அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். எனது ரசிகர்கள் எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை கட்சியில் இணைத்துக் கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். கட்சிக்கும் நமக்கும் நம் இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" அறிவித்து விட்டார்.
தற்போது, அனுப்பப்பட்ட நோட்டீஸில் , " எஸ்ஏ சந்திரசேகரனின் எந்தவித நடவடிக்கைகளுக்கு விஜய் அங்கீகாரம் அளிக்கவில்லை. கட்சியிலும்/ அமைப்பிலும் விஜய் பெயரையும்,புகைப்படங்களையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது.
அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம், விஜய் மக்கள் இயக்கம் ஆகியவற்றின் நடவடிக்கைகள் மீது தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் அந்த நோட்டிஸில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, தனது நிலைப்பாடு குறித்து விளக்கமளித்த எஸ்.ஏ.சந்திரசேகர், “விஜய் பெயரில் முதலில் நான்தான் ரசிகர் மன்றம் தொடங்கினேன். எனக்கு அந்த நடிகரைப் பிடித்திருந்தது அதனால் ரசிகர் மன்றம் தொடங்கினேன். 1993ம் ஆண்டு விஜய் ரசிகர் மன்றம் தொடங்கினேன். அப்போது நான் அவரைக் கேட்க வில்லை. அந்த நடிகரை எனக்கு பிடித்திருந்தது. அதனால், ரசிகர் மன்றத்தை ஆரம்பித்தேன். ஐந்து வருடம் கழித்து ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றமாக மாற்றினேன். அப்புறம் மக்கள் இயக்கமாக மாற்றினேன். பிடிச்ச ஒரு நடிகனோ அல்லது புகழ் பெற்றவரோ இருக்கிறார் என்றால் அவர்கள் பெயரில் ஒரு இயக்கம் ஆரம்பித்து நல்லது செய்தேன். ஒரு தந்தையாக இருந்துகூட நான் இதை செய்யவில்லை. பிடித்த ஒரு நடிகன் பெயரில் நல்லது பண்ணனும் மக்களுக்கு என்று நினைத்தேன். நான் வருகிற தேர்தலைப் பற்றிகூட யோசனையை செய்யவில்லை. 25 வருடமாக நான் இந்த மக்கள் இயக்கம் என்ற பெயரில் மக்களுக்கு பல நல்ல பணிகளை செய்திருக்கிறேன் ரசிகர்களுடன் சேர்ந்து. ரசிகர்கள் எல்லோருக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று இதைச் செய்திருக்கிறேன். வேறொன்றுமில்லை. அரசியல் பற்றி நான் எதுவுமே பேசுவதில்லை.” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.