இரவு 11.20 : “மனு ஏற்கப்பட்டதாகத் தேர்தல் அலுவலர் கூறியது என்னிடம் வீடியோவாக இருக்கிறது. என்ன நடக்கிறது எனப் புரியவில்லை. படத்தில் நடப்பது போல் நிமிடத்திற்கு நிமிடம் திடுக்கிடும் விஷயங்கள் நடைபெறுகின்றன. என்னைப் பார்த்து ஏன் பயப்பட வேண்டும்? தேர்தல் ஆணைய முடிவின் பின்னால் யார் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேட்சையாக நிற்கும் இளைஞர் ஒருவரை வெற்றிபெற வைப்பேன். மக்களுக்கு நல்லது செய்ய வந்தால், இதுதான் கதியா?” என விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.
இரவு 11 : விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. விஷால் அளித்த ஆடியோ ஆதாரத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியாது என தேர்தல் அலுவலர் வேலுச்சாமி கூறியுள்ளார். விஷாலை முன்மொழிந்த இருவர், அதில் இருப்பது தங்கள் கையெழுத்து கிடையாது என தேர்தல் அலுவலரிடம் நேரில் விளக்கம் அளித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரவு 9.30 : விஷாலின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றும், பரிசீலிப்பதாக மட்டுமே தேர்தல் அதிகாரிகள் கூறியதாகவும் தகவல் வெளியானது.
இரவு 8.20 : போலி கையெழுத்துப் போட்டதாகச் சொன்னவரின் உறவினர் வேலுவிடம் விஷால் பேசிய ஆடியோ வெளியானது. அதில், மதுசூதனன் ஆட்கள் முன்மொழிந்தவரை மிரட்டி போலி கையெழுத்து போடச் சொன்னதாக வேலு கூறியிருந்தார். அந்த ஆடியோவை தேர்தல் அதிகாரிகளிடம் விஷால் சமர்ப்பித்ததை அடுத்து, விஷாலின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக விஷால் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
மாலை 7.00 : ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடிபெறும் டிசம்பர் 21ம் தேதி தொகுதி முழுவதும் பொது விடுமுறை விடப்படுகிறது.
மாலை 6.40 : ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 59 பேரின் வேட்புமனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெ.தீபா, விஷால் உள்பட 54 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மாலை 6.30 : என்னுடைய மனு நிராகரிக்கப்பட்டதில் சதி இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பாக மூத்த தலைவர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு போட்டியிட வேண்டாம் என்று கேட்டார். நீங்கள் போட்டியிட்டால் நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம் என்றார். நான் ஜெயலலிதா சாயலில் இருப்பதால் அவர்கள் நான் போட்டியிட்டால், தோற்றுவிடுவோம் என்று பயந்து எனது மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.
மாலை 6.15 : விஷால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதில் சதி இருப்பதாக நடிகர் ரமணா பேட்டியளித்தார்.
மாலை 6.05 : சாலை மறியலில் ஈடுபட்ட விஷாலை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
மாலை 6.00 : வேட்பு மனு தள்ளுபடி செய்ததை அடுத்து நடிகர் விஷால் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார். விஷாலும் அவரது ரசிகர்களும் போலீசாருடன் வாக்குவாதம். இளைஞர்கள் தேர்தலுக்கு வரக்கூடாதா? விதிமுறைகள் பின்பற்றபடவில்லை என விஷால் ஆவேசமாக கூறினார்.
மாலை 5.55: என்னை முன்மொழிந்த நபர்கள் மிரட்டப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான், இதுபோன்று நடைபெற்றுள்ளது. அதற்கான வீடியோ ஆதாரம் இருக்கிறது”, என விஷால் தேர்தல் அதிகாரிகளிடம் முறையீடு செய்துவருகிறார்.
மாலை 5.50: தன்னுடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது குறித்து விளக்கம் கேட்க விஷால் தேர்தல் அலுவலகம் வந்துள்ளார்.
மாலை 5.30: விஷாலின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டது. விஷாலை முன்மொழியாத 2 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி வேலுச்சாமி தெரிவித்துள்ளார். விஷாலின் வேட்புமனுவை ஏற்கக்கூடாது என திமுக, அதிமுக கட்சிகள் கடந்த 4 மணி நேரமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தன
மாலை. 4.16:: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்தார். படிவம் எண் 26ஐ சமர்ப்பிக்காததால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாலை. 3.19: உறுதிமொழி மற்றும் கணக்கு விவரங்களில் குலறுபடி இருப்பதாக கூறி, விஷாலின் மனுவை ஏற்க அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதியம் 1:30:ஆர்.கே. நகரில் போட்டியிட விருப்பம் தெரிவித்த 30 பேரின் வேட்புமனுக்கள் இதுவரை நிராகரிக்கப்பட்டுள்ளன. திமுக வேட்பாளர் மருது கணேஷ், டிடிவி தினகரன் ஆகியோரது வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
ஆர்.கே.நகரில் விஷால் வேட்புமனு தள்ளுபடி ஆகலாம் என திடீர் பரபரப்பு கிளம்பியது. அவரது கையெழுத்து தொடர்பான குளறுபடியே இதற்கு காரணம்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்புமனுக்கள் பரிசீலனை நடந்து வருகிறது. மதுசூதனன், மருதுகணேஷ், டிடிவி தினகரன் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. விஷால் வேட்புமனுவில் கையெழுத்து குளறுபடி இருப்பதாக தெரிகிறது. எனவே அவரது வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. உணவு இடைவேளைக்கு பிறகு அதில் முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.
இதனிடயே அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருது கணேஷ், டிடிவி தினகரன், பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் ஆகியோரது வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதனிடையே வேட்பு மனு தாக்கலில் 9 ஏ படிவத்தை மதுசூதனன் முறையாக நிரப்பவில்லை எனவும், எப்படி அவருடைய வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது எனவும் டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் கேள்வி எழுப்பினார். இதுவரை 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.