நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விவேக் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று மருத்துவமனை நிர்வாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக விவேக் பல படங்களில் நடித்து வந்துள்ளார். ரசிகர்களாலும் சினிமா துறையினராலும் சின்னக் கலைவாணர் என்று கொண்டாடப்படும் விவேக் தனது நகைச்சுவையில் சமூக சீர்திருத்த கருத்துகளைப் பரப்பி வந்தார்.
அதுமட்டுமில்லாமல், நடிகர் விவேக், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு என சமூக சேவைகளில் ஈடுபடுபவர்களை ஊக்குவிப்பவராகவும் அவர்களுக்கு ஆதரவு தருபவராகவும் இருந்து வருகிறார்.
பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், சமூக சேவை பணிகளிலும் ஓய்விலும் இருந்து வந்த நடிகர் விவேக், நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு மூச்சுத் திணறல் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவருடைய குடும்பத்தினர் அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இன்று மாலை சிம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் நடிகர் விவேக் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நடிகர் விவேக்கிற்கு தீவிர நெஞ்சுவலி ஏற்பட்டிருந்தது. அவருக்கு எக்மோ கருவியுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், அந்த அறிக்கையில், “சுயநினைவு இல்லாத நிலையில் நடிகர் விவேக் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்; தற்போது கவலைக்கிடமான நிலையில் உள்ள நடிகர் விவேக் உடல்நிலையின் முன்னேற்றம் குறித்து 24 மணி நேரத்துக்கு பிறகே தெரியவரும். எக்மோ கருவி உதவியுடன் நடிகர் விவேக்குக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது” என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் சமூக சீர்த்திருத்தக் கருத்துகளை தனது நகைச்சுவை மூலம் கொண்டு சென்று ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் விவேக் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருப்பது ரசிகர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"