தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகை ஆர்த்தி தனது கணவர் நடிகர் கணேஷைத் தொடர்ந்து, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முன்னிலையில் செவ்வாய்க்கிழமை பா.ஜ.க-வில் இணைந்தார்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்து வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சுறாவளிப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதே நேரத்தில், அரசியல் கட்சி சார்புடைய நடிகர்கள், நடிகைகளும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
பரபரப்பான மக்களவைத் தேர்தல் பிரச்சார சூழலில், பிரபல நகைச்சுவை நடிகை ஆர்த்தி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முன்னிலையில் செவ்வாய்க்கிழமை பா.ஜ.க-வில் இணைந்தார்.
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆர்த்தி. சினிமாவில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என ரசிகர்களை மகிழ்வித்தவர் ஆர்த்தி. இவர் தன்னுடன் நடித்த நகைச்சுவை நடிகர் கணேஷை காதல் திருமணம் செய்துகொண்டார். இருவரும் சினிமாவிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சேர்ந்து நடித்து ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தனர்.
நடிகை ஆர்த்தி கடந்த 2014-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க-வில் அடிப்படை உறுப்பினராக இணைந்தார். தேர்தலில், அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பின்னர், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்தார். அதே சமயம், ஆர்த்தியின் கணவர் நடிகர் கணேஷ் பா.ஜ.க-வில் இணைந்து பா.ஜ.க உறுப்பினராக உள்ளார்.
இந்நிலையில், பிரபல நகைச்சுவை நடிகை ஆர்த்தி தனது கணவர் கணேஷைத் தொடர்ந்து, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முன்னிலையில் செவ்வாய்க்கிழமை பா.ஜ.க-வில் இணைந்தார்.
நடிகை ஆர்த்தி தனது கணவர் கணேஷ் உடன் கோவை சென்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முன்பு பா.ஜ.க-வில் இணைந்தார்.
இது குறித்து தமிழக பா.ஜ.க எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “பிரபல தமிழ்த் திரையுலகக் கலைஞர், ஆர்த்தி கணேஷ், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமைப் பண்பாலும், நல்லாட்சித் திறனாலும் ஈர்க்கப்பட்டு, நமது மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில், தன்னை பா.ஜ.க-வில் இணைத்துக் கொண்டுள்ளார்.
ஆர்த்தி கணேஷை மகிழ்வுடன் வரவேற்பதோடு, தமிழக மக்களுக்காகப் பணியாற்ற முன்வந்திருக்கும் அவருக்கு, மனமார்ந்த வாழ்த்துக்களையும்
தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பா.ஜ.க-வில் நடிகை குஷ்பு, ராதிகா சரத்குமார், உள்ளிட்ட திரைத்துறையினர் இணைந்துள்ள நிலையில், பிரபல நகைச்சுவை நடிகை ஆர்த்தி கணேஷும் பா.ஜ.க-வில் இணைந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“