பா.ஜக.வின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
தமிழில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான சார்லி சாப்ளின் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ரகுராம். தொடர்ந்து விசில், வை ராஜா வை, அருவம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள இவர், யாதுமாகி நின்றாள் என்ற படத்தை இயக்க தயாரித்திருந்தார். மேலும் பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
அரசியலில் பா.ஜ.க.வில் உள்ள காயத்ரி ரகுராம், வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக உள்ளார். இதனிடையே தமிழக பாஜகவில் சமீப காலமாக உட்கட்சி மோதல் பெரிய பிரச்சனையாக வெடித்து வரும் நிலையில், கட்சியில் சீனியர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள், மூத்த நிர்வாகிகள் அவமதிக்கப்படுகிறார்கள் என்று காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.
மேலும் தான் இத்தனை வருடமாக கட்சியில் இருந்தும், ஒரு பெண் என்றும் கூட பார்க்காமல் சொந்த கட்சியினரே சமூக வலைதளங்களில் தன்னை கடுமையாக விமர்சித்து வருவதாகவும், குறிப்பிட்டிருந்தார். இதில் தற்போது காசியில் நடைபெற்று வரும் தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு கட்சியின் நிர்வாகிகள் பலரும் சென்றிருந்த நிலையில், தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவரான காயத்ரி ரகுராம்-க்கு அழைப்பு விடுக்கவில்லை
இதனிடையே காயத்ரி ரகுராம் பெயரை குறிப்பிடாமல் பாஜக நிர்வாகி ஒருவர் ட்விட்டர் பதிவு வெளியிட்டது, அதற்கு காயத்ரி ரகுராம் பதில் ட்விட் பதிவிட்டதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் திருமதி. காயத்ரி ரகுராம் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் அறிவுறுத்தப்படுகிறது என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“