அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகடன் தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி உறவு வைத்துக்கொண்டதாகவும் அதன் மூலம் பலமுறை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்தாகவும் இப்போது அவர் திருமணம் செய்துகொள்ள மறுத்து கொலை மிரட்டல் விடுப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சாந்தினியின் புகாரின் பேரில் போலீசார் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதால் அவர் தலைமறைவாகியுள்ளார். அவரைக் கைது செய்ய போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
சென்னை பெசண்ட் நகரில் வசித்து வரும் நடிகை சாந்தினி நாடோடிகள் படத்தில் நடித்துள்ளார். இவர் மலேஷிய நாட்டின் குடியுரிமை பெற்றுள்ளார். தேர்தல் முடிந்து ஒரு மாதம்கூட முடிவடையாத நிலையில், நடிகை சாந்தினி, தன்னை முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி 5 ஆண்டுகளாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தார், அதனால், கர்ப்பமடைந்த தன்னை கட்டாயப்படுத்தி பலமுறை கருக்கலைப்பு செய்ய வைத்தார் தற்போது திருமணம் செய்துகோள்ள மறுத்து கொலைமிரட்டல் விடுப்பதாக சென்னை அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னுடன் பழகியதற்கு ஆதாரமாக அந்தரங்கமான புகைப்படங்கள் வீடியோ ஆதராங்களைக் காட்டி சாந்தினி பரபரப்பு புகார் தெரிவித்தார்.
இதற்கு முன்னாள் அமைச்சர் மணிகண்டன், நடிகை சாந்தினி பணம் பறிக்கும் நோக்கத்திலும் தனது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய் புகார் தெரிவித்துள்ளதாகக் கூறி மருத்தார்.
இதனைத் தொடர்ந்து, நடிகை சாந்தினியின் புகாரின் பேரில் அடையாறு அனைத்து காவல் நிலையம் போலீசார், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனைக் கைது செய்ய நடவடிக்கை எடுப்பதைத் தெரிந்து அவர் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியானது. ராமநாதபுரத்தில், மணிகண்டனுக்கு சொந்தமான இடங்களில், போலீசார் அவரைத் தீவிரமாக தேடி வருகின்றனர். மணிகண்டன் முன்னாள் அமைச்சர் என்பதால், அவர் மீது போடப்பட்டிருக்கும் ஒவ்வொரு பிரிவுக்கும் தேவையான தகுந்த ஆதாரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
இதனிடையே, நடிகை சாந்தினி தான் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மூலம் கர்ப்பம் அடைந்ததாகவும் 3 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் அது தொடர்பாக சாந்தினி மருத்துவருடன் பேசும் ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரின் மனைவி வசந்தி ராமநாதபுரம் எஸ்.பி கார்த்திக்கிடம் நடிகை சாந்தினி மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். நடிகை சாந்தினி தன் கணவர் மீது பொய்யான புகார் அளித்து தங்கள் குடும்பத்திற்கு அவமரியாதையையும் , மன உளைச்சலையும் ஏற்படுத்தி வருகிறார். அதனால், சாந்தினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். நடிகை சாந்தினியின் புகாரை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையம் விசாரித்து வருவதால் மணிகண்டனின் மனைவி வசந்தி அளித்த புகாரும் விசாரணைக்கு அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நடிகை சாந்தினி அளித்துள்ள பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் விரைவில் போலீசாரால் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"