சென்னை எழும்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 3 தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலரும் பிரபல நடிகையுமான கஸ்தூரி பங்கேற்று பேச்னார். அப்போது தெலுங்கு மக்கள் குறித்து அவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் கஸ்தூரி மீது அகில இந்திய தெலுங்கு ஜன சங்கத்தினர் சென்னை எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதேபோல் மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கஸ்தூரி மீது பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டன. கஸ்தூரி மீது அளிக்கப்பட்ட புகாரின் அப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக விசாரிக்க போலீசார் கஸ்தூரியிடம் சம்மன் வழங்க சென்றபோது அவரது வீடு பூட்டப்பட்டு இருந்ததாகவும் அவரது தொலைபேசி எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீஸார் கஸ்தூரியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் கஸ்தூரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு நேற்று முன்தினம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கல்வியாளர் சமூக ஆர்வலர் என கூறிக் கொள்பவர் இது போன்று பொறுப்பற்ற முறையில் பேசலாமா என்று நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கஸ்தூரியின் முன் ஜாமீன் மனு இன்று மீண்டும் முதல் வழக்காக விசாரணைக்கு வந்த நிலையில் மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் தலைமறைவாக உள்ள கஸ்தூரியை 2 தனிப்படைகள் அமைத்து தேடிவரும் நிலையில் நடிகை கஸ்தூரிக்கு முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளதால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“