தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நடிகை கஸ்தூரி, ஜாமீனில் வெளியே வந்த நிலையில், “சிறு குரலாக இருந்த என்னை, சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி.” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக, சென்னை, திருச்சி, மதுரை தேனி உள்ளிட்ட இடங்களில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஐதராபாத்தில் இருந்த நடிகை கஸ்துரியை தமிழக போலிசார் சனிக்கிழமை கைது செய்தனர். தமிழக போலீசார் அவரை சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை சிறையில் அடைத்தனர்.
நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், அவர் இன்று (நவம்பர் 21) புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறை வாயிலின் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கஸ்தூரி, “சிறு குரலாக இருந்த என்னை, சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி.” எனத் தெரிவித்துள்ளார்.
புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த நடிகை கஸ்தூரி செய்தியாளர்களிடம் பேசியதாவது: “என்னுடைய குடும்பத்தைப் பாதுகாத்த நண்பர்களுக்கு நன்றி, என்னுடைய வழக்கறிஞர்களுக்கு நன்றி, அரசியல் வித்தியாசம் பாராமல் எனக்காக ஆதரவு தந்த அனைத்து தலைவர்களுக்கும் நன்றி. என்னை உயிருக்கு உயிராக நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி. ஆந்திரா, தெலங்கானா மக்களுக்கு மிகப்பெரிய நன்றி. புழல் சிறையில் என்னை நன்றாக நடத்திய அனைவருக்கும் நன்றி. எல்லாவற்றுக்கும் மேலாக, சிறு குரலாக இருந்த என்னை, சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி.” எனக் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“