நடிகை கஸ்தூரி சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் பற்றி பதிவிட, அதற்கு தி.மு.க-வினர் கஸ்தூரி, சீமானுடன் இருக்கும் புகைப்படத்தை ட்ரோல் செய்த நிலையில், நான் என்ன ஆர்ச் முன்னாடியா செல்ஃபி எடுத்திருக்கேன் என்று நடிகை கஸ்தூரி காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
சேலம் மாடர்ன்ஸ் தியேட்டர்ஸ் முன்பு சிலை அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தி.மு.க அரசை கடுமையாக விமர்சித்தன. இதையடுத்து, அமைச்சர் எ.வ. வேலு, தமிழக அரசுக்கு சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் முன்பு சிலை அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்தார்.
ஆனாலும், பா.ஜ.க, அ.தி.மு.க, நா.த.க ஆதரவாளர்கள் பலரும் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாடர்ன் தியேட்டர்ஸ் முன் செல்ஃபி எடுப்பது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்து தி.மு.க-வை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை கஸ்தூரியும் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரத்தில், தி.மு.க-வை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
“சுதந்திரத்துக்கு முன்னாடியே கட்டப்பட்ட நுழைவு வாயில். இத்தனை வருடம் கழித்து இன்று தி.மு.க அரசின் கண்ணை உறுத்துகின்றது. மந்திரிக்குமாரி உள்ளிட்ட கலைஞரின் பல வெற்றிகளை தினம்தோறும் பறை சாற்றும் நினைவு வாயிலை விட..” என்று நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் பதிவில் தி.மு.க அரசை கடுமையாகச் சாடியிருந்தார்.
இதற்கு, தி.மு.க-வினர், நடிகை கஸ்தூரி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கஸ்தூரியை கிண்டல் செய்து வருகிறார்கள். சீமானுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து தன்னைப் பற்றி மோசமாக பதிவிட்டு வரும் தி.மு.க-வினருக்கு நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் காட்டமாக பதில் அளித்துள்ளார்.
சீமானும் அவரும் சிரித்தவாறு செல்ஃபி எடுத்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த கஸ்தூரி, ' “இந்த photoவத்தான் மூணு நாளா தூக்கிட்டு அலையுறானுங்க D stock மடசாம்பிராணிஸ்.
அதுல பாருங்க, இது 4 வருசம் முன்னாடி நானே share பண்ணது ஒரு சாதா selfie. இதுல பதற்றதுக்கு enna இருக்கு? நான் என்ன Arch முன்னாடியா நின்னு செல்ஃபி எடுத்திருக்கேன்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
நடிகை கஸ்தூரி 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் '25 ஆண்டுக்கால நட்பே, நூறாண்டு வாழி. பெருமதிப்பிற்கு உரிய சீமான் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்' என்று தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தை எடுத்து தி.மு.க-வினர் சமூக வலைதளங்களில் விமர்சித்து பதிவிட்டு வருவதற்கு கஸ்தூரி காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“