“ஆரிய வந்தேரி என விமர்சிக்கும் நீங்கள் எல்லாம் முதலில் தமிழர்களாடா?” என திருச்சியில் நடைபெற்ற பிராமணர் சங்கம் மகளிரணி மாநாட்டில் நடிகை கஸ்தூரி ஆவேசமாக ஒருமையில் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
திருச்சியில் தமிழ்நாடு பிரமாணர் சங்கத்தின் மகளிரணி மற்றும் இளைஞரணி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட நடிகை கஸ்தூரி, “எல்லாரும் தமிழ்நாட்டில் பிராமணர்களை தமிழனே இல்லை, நீ தமிழனே இல்லை, எதற்கு சமஸ்கிருதத்தில் பூஜை செய்கிறீர்கள் என்று சொல்கிறார்கள். ஈழத் தமிழர்கள் இல்லாத நாடே கிடையாது. கனடா, ஜெர்மனி, யூரோப், யு.கே-வில் பார்த்தேன் என்ன அழகாக வேத முழக்கத்தோடு கோவிலில் கும்பாபிஷேகம் செய்கிறார்கள். என்ன பெருமையாக இருக்கிறது. அழகான தூய சமஸ்கிருதத்தில் ஒருமுறை, அழகான தூய தமிழில் ஒருமுறை என மந்திரம் சொல்கிறார்கள். வைதீக பிராமணர்களுக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை எல்லாம் ஒரே சமம். எல்லாரும் சேர்ந்து ஒரே சமபந்தி போஜனமாக சாப்பிடுகிறார்கள். நான் தெரியாமல்தான் கேட்கிறேன், ஈழத் தமிழர்களைவிட நீங்கள் எல்லாம் தமிழர்களாடா? நீங்கள் தமிழர்களா? ஆரிய வந்தேரி என சொல்லும் நீங்கள் எல்லாம் முதலில் தமிழர்களா? ஈழத் தமிழரைவிட உங்களுக்கு எல்லாம் தமிழ்ப் பற்று அதிகமா? அவர்களுக்குத் தெரிந்த ஆன்மீகமும் அறமும் வேறு யாருக்குத் தெரியும். அவர்களிடம் பிராமணர் சமுதாயத்தை மதிக்கும் பண்பு மேலோங்கி இருக்கிறது.” என்று நடிகை கஸ்தூரி ஆவேசமாகப் பேசினார்.
தொடர்ந்து பேசிய நடிகை கஸ்தூரி, பிரிட்டிஷாருக்கு சேவகம் செய்தவர்கள், துபாஷியாக இருந்து மினிஸ்டராக இருந்தவர்கள் பிராமணர்கள் என்று கூறுகிறார்கள். பிரிட்டிஷ் படையில் இருந்தவர்கள் யார், பிரிட்டிஷாருக்கு சமையல் செய்து போட்டது உங்கள் பாட்டி, பிரிட்டிஷாருக்கு துணி துவைத்துக் கொடுத்தது, ஷூ மடித்துவிட்டது, பயிர் செய்து கொடுத்தது என எல்லா சேவைகளையும் செய்தது உங்கள் மூதாதையர்கள்தானே. ஆனால், அவர்களுக்கு அறிவுரை கூறியதாக பிராமணர்கள் மீது பழி போடுகிறீர்கள் ஒத்துக்கொள்கிறோம். ஆனால், சுதந்திரமே வேண்டாம் என்று ஒருவர் கூறியிருக்கிறார்” என்று ஆவேசமாகப் பேசினார்.
மேலும், “சுதந்திரமே வேண்டாம் என்று ஒருவர் கூறியிருக்கிறார், கேட்டால் நாங்கள் எல்லாம் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று கூறுகிறார்கள். எப்படி பிற்படுத்தப்பட்டவர்கள், நாயக்கர் சமூகம் சுதந்திரமானது, பிற்படுத்தப்பட்ட சமூகம் கிடையாது. எல்லாம் தர்ணா பண்ணி வாங்கிய சர்ட்டிஃபிகேட். எத்தனையோ சமூகம் அந்த மாதிரி இருக்கு. கவுண்டர்கள் எல்லாம், நிலச் சுவான்தார்கள், இப்போது வன்னியர்கள் போராட்டம் பண்ணி ரெப்ரசண்ட் பண்ணி வாங்குகிறார்கள். தமிழ்நாட்டில் நியாயமாகப் பார்த்தால், மார்வாடிகளும் சைவப் பிள்ளைமார்களும் பிராமணர்களும்தான் மைக்ரோ மைனாரிட்டி. நீங்கள்தான் சண்டை போட வேண்டும். சண்டை போடுங்கள், ரௌத்திரம் பழகு, பிராமணர்கள் மீது தொடர்ந்து சுமத்தப்பட்டிருக்கும் பொய் பிரச்சாரங்களை குற்றங்களை தகர்த்து எறிவோம். இதையே நாம் புத்தாண்டின் நோக்கமாக வைத்துக் கொள்வோம்.” என்று நடிகை கஸ்தூரி ஆவேசமாகப் பேசியுள்ளார்.
“ஆரிய வந்தேரி என விமர்சிக்கும் நீங்கள் எல்லாம் முதலில் தமிழர்களாடா?” என திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மகளிரணி மாநாட்டில் நடிகை கஸ்தூரி ஆவேசமாக ஒருமையில் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.