நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது என்று நடிகை கஸ்தூரி பேட்டியளித்துள்ளார். இந்து மக்கள் கட்சி சார்பில் மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் கோவை சித்தாபுதூர் பகுதியில் நடைபெற்றது.
அக்கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நடிகை கஸ்தூரி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரியிடம் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக"விற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர் அது உண்மைதான் தமிழகத்தை பொறுத்தவரை திமுக"விற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்றார். அப்போது அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சத்தமின்றி அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
தொடர்ந்து பேசிய கஸ்தூரி எதிர்க்கட்சி வலுவாக இல்லாத காரணத்தால் திமுக"விற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் அதிமுக மற்றும் பாஜக ஒன்றாக இல்லை ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போன்று திமுக கட்டுக் கோப்பாக வலுவான கூட்டணி அமைத்து இருப்பதாகவும் எதிரணி வலுவாக இல்லாததால் நிச்சயமாக திமுக அதிக இடங்களில் வெல்லும் என்பது தான் நிதர்சனமான உண்மை என்றும் சுட்டிக்காட்டினர்.
வேண்டும் மோடி மீண்டும் மோடி என்ற கூட்டத்த்இல் பங்கேற்ற நீங்கள் திமுக"விற்கு சாதகமாக பேசுகிறீர்களே என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பவே,உண்மையை தானே சொன்னேன் நான் பாஜக உறுப்பினர் இல்லை என்றும் ஒரு வலது சாரி சிந்தனையாளர் மட்டுமே என கூறியதுடன் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெறுவது உறுதி என்றும் தனது வாக்கு பாஜக"விற்கு தான் என்றும் தெரிவித்தார்.
மேலும் பாஜக பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுவது தொடர்பான கேள்விக்கு, தங்கள் கட்சி வெற்றி பெறும் என கூறுவது இயல்பான ஒன்றுதான் என்றார். இதேபோல் நடிகர்கள் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் அதுதான் அவர்கள் பணி பொது கருத்துக்களை நடிகர்கள் தான் பேச வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்து தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த கஸ்தூரி,அதிலிருந்து தான் மாறுபட்டிருப்பதாகவும் சமூகத்தின் மீது அக்கறையுள்ள யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம் அதில் நடிகர் நடிகை விதிவிலக்கல்ல என்றும் குறிப்பிட்டார்.
நடிகர் விஜய் துவங்கியுள்ள புதிய கட்சியில் 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளது குறித்த கேள்விக்கு, தான் ஒரு தீவிர விஜய் ரசிகை என்றும் அவருக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் கூறியதுடன் ஒரு உறுதிப்பாட்டுடன் நடிகர் விஜய் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“