இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன ஆதரவு வழக்கறிஞர்களுக்கான கருத்தரங்கு திருச்சி ஸ்ரீரங்கத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு முன்னதாக, நடிகை கஸ்தூரி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது; "நவம்பர் 3 ஆம் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் என்ன விஷயங்கள் பேசப்பட்டதோ அது பெரிய விஷயமாகாமல் கஸ்தூரி பேசாத விஷயம்தான் மிகப்பெரிய செய்தியானது. அன்று பேசிய விஷயங்களை மீண்டும் எப்படி ஆக்கபூர்வமாகவும் சட்ட ரீதியாகவும் அணுகுவது என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதித்தோம். பிராமணர்கள் ஏதாவது குரல் கொடுத்தால் அவர்கள் மீது பொய் வழக்கு போடுவதும் அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதும் நடக்கிறது. இதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதித்தோம்.
2026 தேர்தலில் கூட்டணி கணக்கை வைத்து தி.மு.க வென்று விட வேண்டும் என்ற நினைப்பது மைனஸ் ஆகும் என விஜய் தெரிவித்து இருப்பது நடந்தால் அவர் வாயில் நான் சர்க்கரை போடுவேன். இதைப் பேசியதற்கு அவருக்கு ஆதரவு கொடுக்கலாமே!
திருமாவளவன் தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியே வருவாரா என்று தெரியவில்லை ஆனால் ஆதவ் அர்ஜுன் மற்றும் திருமாவளவன் இனி விடுதலை சிறுத்தை கட்சியில் ஒன்றாக இருப்பார்களா என்பது தெரியவில்லை. நீண்ட நாட்களாக தி.மு.க.,வுடன் வாக்கப்பட்டு, வி.சி.க அவர்களுடன் இருக்கிறது. தி.மு.க கூட்டணியில் இருந்து வி.சி.க வெளியே வர வாய்ப்பில்லை. வி.சி.க.,வில் திருமாவளவன் இருக்க வேண்டும் அல்லது ஆதவ் அர்ஜூன் இருக்க வேண்டும் என்கிற நிலை தற்போது உருவாகி உள்ளது.
சினிமா செய்திகளை பார்க்கவில்லை என உதயநிதி கூறியுள்ளது ரெட்ஜெயிண்ட் குறித்து பேசியுள்ளார் எனத் தெரிகிறது. உதயநிதி தரக்குறைவாக பேசுவது ஒன்றும் புதிது அல்ல. ஏற்கனவே உதயநிதி சனாதனம் குறித்து பேசி உள்ளார். ரஜினி குறித்தும் தரக்குறைவாக பேசியுள்ளார். தற்போது விஜய், ஆதவ் அர்ஜூன் குறித்தும் அப்படி பேசி உள்ளார். திரும்பத் திரும்ப அவர் அப்படி தான் பேசுகிறார்.
உதயசூரியனுக்கு எதிர் இரட்டை இலை தான் என கடந்த 60 ஆண்டுகளாய் இருந்து வருகிறது. விஜய்யை பயன்படுத்தி அ.தி.மு.க.,வின் உண்மையான வீச்சையும் அவர்களின் முகத்தையும் மறைக்கிறார்கள். இது ஒரு வியாபாரத் தந்திரம். ஒரு கட்சியின் கூட்டணிக்கு எதிராக அனைத்து கட்சிகளும் தனித்தனியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து கட்சிகளும் ஒரே குடையின் கீழ் வந்தால் நன்றாக இருக்கும்.
வெள்ளத்தில் தண்ணீர் வடிந்ததற்கு காரணம் மின்மோட்டார் கொண்டு தண்ணீரை உறிஞ்சியதுதான். தானாக தண்ணீர் வடியவில்லை. விஜய், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோரை உசுப்பேத்திவிட்டு தி.மு.க பிரித்தாலும் சூழ்ச்சியை செய்து கொண்டிருக்கிறார்கள். சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை, தி.மு.க.,வை வீழ்த்த அவர் கொள்கையை ஒதுக்கி வைத்துவிட்டு ஓர் அணியில் ஒன்றிணைய வேண்டும். மக்களின் ஒரே ஆசை தி.மு.க.,வை வெளியேற்ற வேண்டும் என்பதுதான். அதை தி.மு.க.,வை எதிர்க்கும் அனைவரும் ஒரே குடையின் கீழ் சேர்ந்து செய்ய வேண்டும்" என்றார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.