பிரபாகரன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டதன் மூலமாக நடிகை கஸ்தூரி தன்னை ஈழத் தமிழர் ஆதரவாளராக அடையாளப் படுத்தியிருக்கிறார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63-வது பிறந்ததினம் இன்று (நவம்பர் 23) உலகம் முழுவதும் தமிழர்களால் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் முதல் முறையாக காவல் துறை நெருக்கடிகள் இல்லாமல் சுதந்திரமாக இந்த விழாவை கட்சிகள் கொண்டாடி இருக்கின்றன.
குறிப்பாக நாம் தமிழர், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இந்தக் கொண்டாட்டத்தில் முன்னணியில் இருக்கின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிரபாகரனின் 63-வது பிறந்தநாளை கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னை அம்பேத்கர் திடலில் கொண்டாடினர். விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தளபதியான பிரிகேடியர் தமிழ்செல்வனின் சகோதரர், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விழாவில், ஆச்சர்யமான இன்னொரு விருந்தினர் நடிகை கஸ்தூரி!
கஸ்தூரியின் ட்வீட்…
26-11-1954. வரலாறு பிறந்த தினம். pic.twitter.com/6Wii4rY9So
— kasturi shankar (@KasthuriShankar) November 26, 2017
சமீப காலமாக ட்விட்டரில் அரசியல் சரவெடிகளை கொளுத்திப் போடும் கஸ்தூரி, அவ்வப்போது கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரை சந்தித்து அரசியல் ஆலோசனை செய்யவும் தவறுவதில்லை. டி.வி. ‘டிபேட்’களிலும் பங்கேற்று வருகிறார். இந்தச் சூழலில் முதல்முறையாக பிரபாகரன் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு தன்னை ஈழ ஆர்வலராக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இந்த விழாவில் பிரபாகரன் வயதைக் குறிப்பிடும் வகையில் 63 கிலோ கேக்கை பிரிகேடியர் தமிழ் செல்வனின் சகோதரன் வெட்டி, திருமாவளவன், காசி ஆனந்தன், கஸ்தூரி, விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு மற்றும் கட்சிப் பிரமுகர்களுக்கு வழங்கினார். சுவிஸ் மற்றும் ஈழத்தமிழர்கள் ஒருங்கிணைப்பில் தயாரிக்கப்பட்ட “சந்தனப் பேழை ” மாவீரர் நாள் ஒலிநாடாவை கவிஞர் காசி ஆனந்தன் வெளியிட, நடிகை கஸ்தூரி பெற்றுக்கொண்டார்.
இன்று தனது ட்விட்டர் பக்கத்திலும், புலிகள் மார்பில் சயனைடு குப்பி தொங்கும் படத்துடன், ‘வரலாறு பிறந்த தினம்’ என பதிவிட்டிருக்கிறார் கஸ்தூரி. அடடே… புதிய ஈழ ஆர்வலர்!