கவர்னர் மாளிகையை நோக்கி ஊர்வலம் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால், வேளச்சேரி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கு நடிகை கஸ்தூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரக் கூடாது என்பதை வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், சைதாப்பேட்டையில் இருந்து, கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலம் நடந்தது. மாலை 4 மணிக்கு நடந்த இந்த ஊர்வலத்தில் திருமாவளவன் உள்பட பலரும் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் முடிவில் திருமாவளவன், கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து மனு கொடுத்தார்.
இந்த ஊர்வலத்தால், சைதாப்பேட்டை நீதிமன்ற சாலை, வேளச்சேரி சாலை போன்ற முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேளச்சேரியில் இருந்து சைத்தப்பேட்டையை நோக்கி நடிகை கஸ்தூரி காரில் வந்துள்ளார். ஆனால் 45 நிமிடமாக கார் நகராமல் அங்கேயே நின்றுள்ளது. ’கவர்னர் மாளிகை நோக்கி விசிக ஊர்வலம் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொது மக்களை பாதிக்கக்கூடிய இது போன்ற போராட்டங்களை ஒரு பேஷனாகவே அரசியல் கட்சிகள் நடத்துவது ஏன் என்பது தெரியவில்லை’ என்று பதிவிட்டுள்ளார்.
இதை கிண்டல் செய்து எ.எல்.சாமி என்பவர் பதிவிட அதற்கு பதில் தரும் வகையில், நான் சிறிது தூரம் நடந்து சென்று ஆட்டோ பிடித்து சென்றேன் என பதில் சொன்னதோடு, ’எனக்கே இந்த நிலை என்றால் சாதாரணமானவர்களில் நிலை என்ன? போக்குவரத்து நெரிசலில் அம்புலன்ஸ், குப்பை லாரியும் சிக்கிக் கொண்டது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.