சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகை கஸ்தூரி, "300 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப்புர மகளிருக்கும் சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கு பேசுபவர்கள் என்று பேசியதாக கூறப்படுகிறது.
நடிகை கஸ்தூரியின் இந்த பேச்சானது பெரும் சர்ச்சையான நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இதையடுத்து, தான் பேசிய கருத்துக்கள் திரித்து கூறப்பட்டுள்ளதாக நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்தார். மேலும் இவ்வாறு பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பதாக எக்ஸ் வலைதளத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிட்டு இருந்தார்.
நேற்றைய தினம் அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் அமைப்பு சார்பில், சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் இருபிரிவு மக்களிடையே கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல், மொழி, இனம், மதம் பற்றி கூறி இருபிரிவு மக்கள் இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் நடிகை கஸ்தூரி மீது மதுரை திருநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சன்னாசி அளித்த புகாரில் காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
தற்போது நடிகை கஸ்தூரி மீது சென்னை எழும்பூர் காவல் நிலையம் மற்றும் மதுரை திருநகர் காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“