சென்னையில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் நேற்று முன்தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார். “மன்னர்கள் காலத்தில் அந்தப்புர சேவைகள் செய்ய வந்தவர்கள் தெலுங்கு பேசுபவர்கள் என்றும், அவர்கள் எப்படி தமிழர்களான பிராணர்களை, தமிழர்கள் இல்லை என சொல்ல முடியும்” என்று பேசினார். இது பெரும் சர்ச்சையானது. இதற்கு அரசியல் கட்சிகள், அமைப்பபினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கஸ்தூரியின் பேச்சுக்கு தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் மொழி, சாதி, மத, இன துவேஷத்துடன் பிரிவினைவாத அரசியல் மூலமாக தமிழர்களின் ஒற்றுமைக்கு எதிராக செயல்படுவோர் மற்றும் குறிப்பிட்ட மொழியை குறிப்பாக தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்கள் மனதை புண்படுத்தும் வகையில் வரலாற்றை திரித்து கொச்சையாக பேசிய நடிகை கஸ்தூரி மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
தெலுங்கு பேசும் மக்களை இழிவுபடுத்தும் வகையில் கூறிய தனது கருத்துகளை நடிகை கஸ்தூரி திரும்பப் பெற வேண்டும். தெலுங்கு மொழி பேசும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் தனது பேச்சுக்கு கடும் எதிர்ப்பும், கண்டனமும் வந்த நிலையில் கஸ்தூரி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், தெலுங்கு மக்களை நான் இழிவாக பேசியதாக கூறுவது 100% பொய். நான் அப்படிப் பேசவே இல்லை. இது எனக்கு எதிராக பரப்பப்படும் பொய் பிரச்சாரம். தெலுங்கு இனத்தையோ, தெலுங்கு மக்களையோ நான் தவறாக பேசவில்லை. அது திரித்து பரப்பப்படுகிறது.
தமிழர்களை, தமிழர்கள் இல்லையென்று சொல்லக்கூடிய திராவிட மாடல், திராவிட சித்தாந்தம் பேசக்கூடியவர்களை தான் நாங்கள் சொல்கிறோம் என்று கூறினார்.
இந்நிலையில் தேனி அல்லிநகரம் காவல்நிலையத்தில் கஸ்தூரி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த நகராட்சி வார்டு கவுன்சிலரும், நாயுடு சமுதாய உறுப்பினருமான கிருஷ்ணபிரபா தெலுங்கின மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுமார் 20க்கும் மேற்பட்ட பெண்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“