தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவையில் தெலுங்கு பேசும் பல்வேறு சமூக சங்கத்தினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.
கடந்த நான்காம் தேதி சென்னையில் நடைபெற்ற இந்து மக்கள் கட்சி கூட்டத்தில் பங்கேற்று பேசிய நடிகை கஸ்தூரி, 300 வருடங்களுக்கு முன்னால் ஒரு ராஜாவின் அந்தபுற பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான் தெலுங்கு இன மக்கள் என குறிப்பிட்டிருந்தார்.
கஸ்தூரியின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தெலுங்கு பேசும் பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் இதற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இந்த சூழலில் கோவையில் தமிழ்நாடு ரெட்டி நல சங்கம், தமிழ்நாடு கம்ம நாயுடு எழுச்சி பேரவை, தேவாங்க சமூக நல இயக்கம், தமிழ்நாடு கவர பல்ஜா நாயுடு நல சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்கள் கூறுகையில்.
விஜயநகர பேரரசு தொடங்கி கடந்த ஆயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தமிழ் மொழியை பாதுகாத்து தெலுங்கு பேசும் தெலுங்கு இன மக்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருவதாகவும் மாநிலம் முழுவதும் சுமார் இரண்டரை கோடி பேர் தெலுங்கு பேசும் மக்கள் உள்ள சூழலில் நடிகை கஸ்தூரியின் இந்த அவதூறு பேச்சு வண்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் நடிகை கஸ்தூரி தனது பேச்சுக்கு நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“