ஆர்.கே.நகரில் திமுக.வுக்கு ஆதரவு கொடுத்து வைகோ அறிவித்ததை கேலி செய்யும் விதமாக நடிகை கஸ்தூரி வெளியிட்ட ‘ட்வீட்’ வைரல் ஆகிறது.
வைகோ, 1993-ல் தனிக்கட்சி கண்ட பிறகு சட்டமன்றத் தேர்தல்களில் திமுக.வுடன் கூட்டணி கண்டதே இல்லை. ஆனால் நாடாளுமன்றத் தேர்தல்களில் வாய்ப்பு கிடைக்கிற நேரங்களில் கூட்டணி அமைத்து வந்திருக்கிறார். தற்போது பாஜக எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கும் வைகோ, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்ணன் வைகோ அவர்கள் தான் திமுகவுக்கு ஆதரவு தருவதற்கான காரணத்தை விளக்கியபோது... pic.twitter.com/WB2VA8mQ19
— சித்ரா தேவி (@chithradevi_91) December 3, 2017
இதற்கு முன்னோட்டமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக.வுக்கு வைகோ ஆதரவு கொடுத்திருப்பதாக கருதப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு தலைமை தாங்கி, திமுக.வை வீழ்த்தியதில் வைகோவுக்கு முக்கிய பங்கு உண்டு. அது முதல் இணையதளங்களில் வைகோவுக்கு எதிராக ‘மீம்ஸ்’களை தட்டிவிடுவதில் திமுக.வினர் மும்முரம் ஆனார்கள்.
வைகோ.வும் சந்தர்ப்பம் கிடைக்கிற போதெல்லாம் திமுக.வை காய்ச்சி வந்தார். குறிப்பாக திமுக தரப்பு ஊழல்கள், ஈழத்தமிழர் படுகொலை குறித்து திமுக மீது அவர் முன்வைத்த கடும் விமர்சனங்கள் இணையங்களில் உள்ளன. ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அப்பல்லோ வாசலில் வைகோ கொடுத்த பேட்டியிலும், ஜெயலலிதா மரணம் அடைந்தபிறகு அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த வைகோ அப்போது கொடுத்த பேட்டியிலும் திமுக.வை கடுமையாக தாக்கினார்.
வைகோ மீது திமுக.வினரின் வெறுப்பு பல மடங்கு எகிற இந்த நிகழ்வுகள் காரணம். இதனாலேயே காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதியை பார்க்க வைகோ சென்றபோது, திமுக.வினர் அநாகரீகமாக கல்வீசி விரட்டும் நிலைக்கு சென்றனர். அதன்பிறகும், ‘யாரையாவது தோற்க வைக்கவேண்டும் என்றால் அவருக்கு வைகோவின் ஆதரவைக் கொடுத்தால் போதும்’ என்கிற கருத்து வரும்படியான மீம்ஸ்களை தொடர்ந்து திமுக.வினர் வெளியிட்டனர்.
,????????????????புரிஞ்சிடிச்சி.... Dmkவுக்கு ஆதரவு ஏனென்று... Vaiko வின் masterplan... ????????#GoodLuckCharm https://t.co/dwS498pH3G
— kasturi shankar (@KasthuriShankar) December 4, 2017
இந்தச் சூழலில் ஆர்.கே.நகரில் திமுக.வுக்கு வைகோ ஆதரவு கொடுத்திருப்பது இணையதளங்களில் இயங்கும் திமுக குழுவினருக்கு செமையான அதிர்ச்சி! இதை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்து வருகிறார்கள் அவர்கள். ‘ஒருவேளை ஆர்.கே.நகரில் திமுக தோற்றால், சொல்வதற்கு காரணம் கிடைத்துவிட்டது’ என்பது மட்டுமே அவர்களுக்கான ஒரே ஆறுதல்.
திமுக.வினர் மெளனமாக இருந்தாலும், இதர பல்வேறு தரப்பினரும் திமுக.வுக்கு வைகோ ஆதரவு கொடுத்திருப்பதை கிண்டி கிழங்கெடுக்கிறார்கள். சித்ரா தேவி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அண்ணன் வைகோ அவர்கள் தான் திமுகவுக்கு ஆதரவு தருவதற்கான காரணத்தை விளக்கியபோது...’ என குறிப்பிட்டு, திமுக.வையும் அதனுடன் கூட்டணி சேர்கிறவர்களையும் கடுமையாக தாக்கி வைகோ அளித்த பழைய பேட்டியின் வீடியோ பதிவை வெளியிட்டிருக்கிறார்.
அதை ‘ரீ ட்வீட்’ செய்திருக்கும் கஸ்தூரி கூடவே, ‘புரிஞ்சிடிச்சி.... Dmkவுக்கு ஆதரவு ஏனென்று... Vaiko வின் masterplan’ என கமெண்ட் செய்திருக்கிறார். விஷாலும் களமிறங்கி வாக்குகளை பிரிக்கவிருக்கும் சூழலில், வைகோ செண்டிமெண்ட் எப்படி வொர்க் அவுட் ஆகுமோ என்கிற பதற்றம் மதிமுக.வினருக்கும் இருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.