Kushboo | Magalir Urimai Thogai | நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான குஷ்பு, “ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக பேசியது அண்மையில் சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என தி.மு.க.வினர் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை குஷ்பு சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றின் மூலம் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், “தமிழ்நாட்டில் இருக்கும் பெண்களுக்கு ரூ.1000 கொடுப்பதற்கு பதிலாக டாஸ்மாக் மதுக் கடைகளை குறைக்க வேண்டும். அப்போது, பல ஆயிரம் ரூபாய் பெண்கள் சேமிப்பார்கள்; அவர்கள் குடும்பத்தை நல்லபடியாக தலைநிமிர்ந்து நடத்த முடியும் என்றுதான் சொன்னேன்.
இந்தப் பேச்சை திசை திருப்பிவிட்டு பெண்களை கேவலப்படுத்தி விட்டார் என்கிறார்கள். பொதுவாகவே பெண்களை அவமதிப்பது, கேவலப்படுத்துவது தி.மு.க.வின் மரபணுவிலே உள்ளது.
இந்தப் பூச்சாண்டி வேலையெல்லாம் என்கிட்ட பலிக்காது. நான் தவறு செய்தால் சிறு குழந்தையின் காலில் கூட விழுந்து மன்னிப்பு கேட்பேன். பயந்து ஓடிவிட மாட்டேன்” என்றார்.
தொடர்ந்து, “நான் மீண்டும் சொல்கிறேன், எனக்கு அரசியல், மேடை நாகரீகம் மற்றும் தைரியமாக பேசுவது இவற்றையெல்லாம் சொல்லிக் கொடுத்தது எனது ஆசான் கலைஞர். இதை நீங்கள் மறந்து இருக்கலாம்; நான் மறக்க மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“