நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் காரணமாக, அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படவில்லை என பா.ஜ.க நிர்வாகி குஷ்பூ குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள தமிழக பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பிரமுகர்களான சரத்குமார் மற்றும் குஷ்பூ ஆகியோர் தேசிய கொடியை ஏற்றினர். இதைத் தொடர்ந்து, நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குஷ்பூ கலந்து கொண்டார்.
அப்போது, "அஜித்குமார், ஷோபனா, பாலய்யா ஆகியோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சினிமா துறையைச் சேர்ந்தவர்களுக்கு இந்த அங்கீகாரம் அளித்ததற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். நியாயமான முறையில் தான் விருது பெறுபவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விஜய்யின் அரசியல் வருகைக்கும், அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படுவதற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை.
மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்களை அச்சடித்து காப்பி அடிப்பது தான் மாநில அரசின் வேலை. இதன் மூலம் தங்களால் தான் திட்டம் செயல்படுத்தப்பட்டதாக மாநில அரசு பெயர் வாங்குவார்கள். அரிட்டாப்பட்டியில் நடைபெறும் பாராட்டு விழாவால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது என்றால் எனக்கும் சந்தோஷம் தான்" என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நடப்பு ஆண்டில் நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருதுகள் வழங்கப்படும் என மத்திய அரசு சார்பில் நேற்று (ஜன 25) அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், கலைத்துறையில் குருவாயூர் துரை, சமையல் கலைஞர் தாமோதரன், பத்திரிகையாளர் லட்சுமிபதி ராமசுப்பையர், எம்.டி.ஸ்ரீனிவாஸ், புரசை கண்ணப்பா சம்பந்தம், கிரிக்கெட் வீரர் அஸ்வின், ஆர்.ஜி.சந்திரமோகன், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, சீனி விஸ்வநாதன், வேலு ஆசான் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.