அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு ட்விட்டரில் சுடச்சுட பதில் கொடுத்திருக்கிறார் நடிகை குஷ்பூ. தனது வயதைப் பற்றி முகம் சுழிக்கும் வகையில் பேசிய செல்லூர் ராஜூவை சற்று நாகரீகமாகவே குஷ்பூ பேசியிருக்கிறார்.
நடிகையும் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பூ, மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் அதிகம் தலை காட்டவில்லை. தமிழக காங்கிரஸில் அவரால் ‘தலைவர்’ என அழைக்கப்படுகிற ஒரே நபர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
அவர் மீது கொண்ட மரியாதை காரணமாக தேனி தொகுதியில் இளங்கோவனுக்காக பிரசாரம் செய்தார் குஷ்பூ. உசிலம்பட்டியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அதிமுக.வை விமர்சித்தார் குஷ்பூ.
இதற்கு இன்று பேட்டியில் பதில் கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘வைகை ஆற்றில் எருமையை குளிப்பாட்டினால்கூட கூட்டம் வரத்தான் செய்யும். நடிகர்- நடிகைகளுக்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறாது’ என்றவர் குஷ்பூவின் வயது அதிகமாகிவிட்டது என்பதாகவும், அவரது தோல் நிறம் குறித்தும் முகம் சுழிக்கும் விதமாக கமெண்ட் செய்தார்.
இதற்கு டிவிட்டரில் சுடச்சுட பதில் கொடுத்திருக்கிறார் குஷ்பூ. ‘நம்ம அதிமுக விஞ்ஞானி செல்லூர் ராஜூவுக்கு வயது ஆகிவிட்டதுன்னு நல்லாத் தெரியுது. பாவம், என்னென்னமோ பேசிக்கொண்டு இருக்குறாரு...
ஆனாலும் எனக்கு வருகிற கூட்டத்தை அவர்கள் கவனிப்பதற்காக பெருமைப்படுகிறேன். 30 ஆண்டுகளுக்கு பிறகும் இதை என்னால் செய்ய முடிகிறது என்றால், அந்தப் பெருமை தமிழக மக்களுக்குத்தான்’ என குறிப்பிட்டிருக்கிறார் குஷ்பூ.