தமிழ்நாடு பா.ஜ.க-வில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், பா.ஜ.க மாநில துணைத் தலைவராக நடிகை குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பா.ஜ.க-வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பட்டியல், தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் ஒப்புதலுடன் இந்த பட்டியல் வெளியாகி இருக்கிறது என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, மாநில இளைஞரணி தலைவராக சூர்யா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். மேலும், மாநில துணை தலைவராக நடிகை குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார். மாநில பொருளாளராக எஸ்.ஆர். சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தவிர பா.ஜ.க மாநில பிரிவு அமைப்பாளராக கே.டி. ராகவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வினோஜ். பி. செல்வம், ஏற்கனவே தாம் வகித்து வந்த செயலாளர் பதிவியில் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கராத்தே தியாகராஜன், வெங்கடேசன், அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 15 பேருக்கு மாநில செயலாளர்கள் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநில பொதுச் செயலாளர் பட்டியலில் பால கணபதி, பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன், முருகானந்தம், கார்த்திகாயினி உள்ளிட்ட ஐந்து பேருக்கு பதவி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், 14 துணைத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, துணைத் தலைவராக இருந்த கரு. நாகராஜன், அதே பதவியில் தொடர்வார் என்று பா.ஜ.க அறிவித்துள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்தவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சசிகலா புஷ்பாவிற்கு மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பட்டியலில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க-வில் இணைந்த விஜயதரணிக்கு எந்த விதமான பொறுப்பும் வழங்கப்படவில்லை.
ஏற்கனவே, நடைபெற்ற இடைத்தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், இப்போது அவருக்கு ஏதேனும் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போதும் அவருக்கான பதவி வழங்கப்படாதது பேசுபொருளாகியுள்ளது. மேலும், தனது சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.க-வுடன் இணைத்த சரத்குமாருக்கும், தற்போது வெளியிடப்பட்ட பட்டியலில் பொறுப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவை பா.ஜ.க மட்டுமின்றி தமிழக அரசியலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலரும் விவாதித்து வருகின்றனர்.