Advertisment

“தீபாவளி சீர் வாங்கிக்க ஆச்சி இல்லையே...” மனோரமாவுக்கு 2-ம் ஆண்டு நினைவஞ்சலி

அவங்க இருந்த வரைக்கும் புடவை எடுத்து, பழங்கள் வச்சு சீர் அனுப்புவேன். அது கிடைச்சதும், ‘என் தாய்வீட்டு சீதனம் வந்துடுச்சு அப்பச்சி’னு போன் பண்ணுவாங்க.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Manorama, Achi Manorama, AVM, AVM Saravanan, Actress

‘ஆச்சி’ என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் நடிகை மனோரமா. மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கி, திரைப்பட நடிகையாக மாறியவர். 1500க்கும் மேற்பட்ட படங்கள், 5000க்கும் மேற்பட்ட மேடை நாடகங்கள் என இவருடைய நடிப்பு அனுபவம் மிகவும் பெரியது.

Advertisment

1000 படங்களில் நடித்ததற்காக, கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தவர். தமிழக அரசின் கலைமாமணி, மத்திய அரசின் பத்மஸ்ரீ மற்றும் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது ஆகியவற்றைப் பெற்றவர். கடந்த 2015ஆம் ஆண்டு, தன்னுடைய 78வது வயதில் உயிர்நீத்தார் மனோரமா. அவர் இறந்து இன்றுடன் 2 ஆண்டுகள் ஆகின்றன.

ஏவி.எம். நிறுவனம் தயாரிப்பில், 27 படங்களில் நடித்தவர் ஆச்சி மனோரமா. ஒரு நடிகை, ஒரே தயாரிப்பு நிறுவனத்தின் இத்தனைப் படங்களில் நடித்தது ஆச்சரியம். அதனால், ஏவி.எம். நிறுவனத்தைத் தன்னுடைய ‘தாய்வீடு’ என்றுதான் குறிப்பிடுவார் ஆச்சி. “நாங்கள் தயாரித்த ‘களத்தூர் கண்ணாம்மா’வில்தான் முதன்முதலாக ஆச்சி நடித்தார். ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’, ‘சம்சாரம் அது மின்சாரம்’ இரண்டும் சில்வர் ஜூப்ளி படங்கள். தமிழ் மட்டுமல்லாம, தெலுங்கிலும் எங்க கம்பெனிக்காக நடிச்சிருக்காங்க. ‘ஆச்சி இண்டர்நேஷனல்’னு டிவி சீரியல் ஒன்னு பண்ணோம். கிட்டத்தட்ட 53 எபிசோடுகள் அந்த சீரியல் ஒளிபரப்பானது. அதை டவுன்லோடு பண்ணி, உலகம் முழுவதும் லைப்ரரில வச்சுருக்காங்க.

Manorama, Achi Manorama, AVM, AVM Saravanan, Actress ஏவி.எம். சரவணன்

‘சம்சாரம் அது மின்சாரம்’ படம், இயக்குநர் விசு கூட காண்ட்ராக்ட் புரொடக்‌ஷன். ஆச்சி 20 ஆயிரம் சம்பளம் கேட்க, 15 ஆயிரம்தான் குடுத்துருக்காங்க. அந்தப் படத்தை முடிச்சுட்டு, அடுத்து ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ பண்ணோம். ‘போன படத்துக்கு 15 ஆயிரம்தான் சம்பளம் குடுத்தாங்க அப்பச்சி. இந்தப் படத்துல அந்த அஞ்சாயிரத்தையும் சேர்த்து 25 ஆயிரமா வேணும்’னு கேட்டாங்க. ‘உங்க மார்க்கெட் வேல்யூ உங்களுக்குத் தெரியலை ஆச்சி. ரொம்பக் கம்மியான சம்பளம் கேக்குறீங்க’னு சொல்லி, அவங்க கேட்டமாதிரியே 25 ஆயிரம் குடுத்தேன். அதுமட்டுமல்லாம, அந்தப் படம் ஷூட்டிங் முடிஞ்சதும் இன்னும் கொஞ்சம் பணம் குடுத்தேன். ‘எதுக்கு அப்பச்சி?’னு கேட்டாங்க. ‘உங்களுக்கு சம்பளமே கேக்கக் தெரியலை ஆச்சி’னு சொன்னேன்.

சில வருஷங்கள் கழிச்சு ‘எஜமான்’ படத்துல நடிக்க வந்தவங்க, பெரிய தொகையை சம்பளமா கேட்டாங்க. ‘கேக்கத் தெரியலைன்னு சொன்னேன். அதுக்காக இவ்வளவு பெரிய தொகை கேக்குறீங்களே…’னு சொன்னேன். ஒரு காமெடி நடிகர் பேரைச் சொல்லி, ‘அவருக்கு எவ்வளவு சம்பளம்?’னு கேட்டாங்க. ‘மூணு லட்சம்’னு சொன்னேன். ‘அது எனக்கு ஏத்த சம்பளம் இல்லைனு நீங்க நினைச்சா, நீங்க என்ன குடுக்குறீங்களோ, அதை நான் வாங்கிக்கிறேன்’னு சொன்னாங்க. ‘நீங்க சொல்றது நியாயம்தான் ஆச்சி’னு சொல்லி, மூணு லட்சம் சம்பளம் குடுத்தேன்.

‘வீரத்திருமகன்’ பட ஷூட்டிங் சமயத்துல ஒருநாள் ஷூட்டிங் கேன்சல். அதை யாருமே அவங்ககிட்ட சொல்லலை. ட்ரெஸ் பண்ணிக்கிட்டு, மேக்கப் போட்டு ஸ்பாட்டுக்கு வந்தபிறகுதான் அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. நேரா என் ரூமுக்கு வந்தாங்க. மத்த நடிகையா இருந்தா, கோபத்துல கத்தியிருப்பாங்க. ஆனா, ‘இந்தப் படத்துக்கு புதுசா புரொடக்‌ஷன் மேனேஜர் போட்டுருக்கீங்க. இதுதான் அவருக்கு முதல் படம். எனக்கு தகவல் சொல்லலைங்கிறதுக்காக அவரை வேலையைவிட்டுத் தூக்கிடாதீங்க. அவர் பாவம்’னு அவருக்காகப் பரிந்து பேசுனாங்க. இப்படிப்பட்ட நடிகையை என் வாழ்க்கையில பார்த்தது கிடையாது.

எதையுமே கண்டிப்போட கேட்க மாட்டாங்க. எங்ககிட்ட உரிமை எடுத்துக்கிட்டுதான் கேப்பாங்க. 12 வருஷம் இருக்கும்னு நினைக்குறேன். தீபாவளி சமயத்துல ஒருநாள் போன் பண்ணி, ‘என் தாய்வீட்டுல இருந்து எனக்கு சீதனமே வர்றது இல்லை’னு கேட்டாங்க. அவரே இவ்வளவு உரிமையா கேட்கும்போது மறுக்க முடியுமா? அன்னைல இருந்து அவங்க இருந்த வரைக்கும் புடவை எடுத்து, பழங்கள் வச்சு சீர் அனுப்புவேன். அது கிடைச்சதும், ‘என் தாய்வீட்டு சீதனம் வந்துடுச்சு அப்பச்சி’னு போன் பண்ணுவாங்க. கடந்த இரண்டு வருஷமா நான் அனுப்புற சீரை வாங்கிக்க ஆச்சி இல்லையே…” என்று கலங்குகிறார் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன்.

 

Avm Saravanan Manorama
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment