பட்டியல் இனத்தவரை ஜாதியைச் சொல்லி இழிவாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில், கேரளாவில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் இன்று சென்னை அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நடிகை மீரா மிதுன் தனது நண்பர் அபிஷேக் ஷாம் உடன் இணைந்து பட்டியல் இனத்தவரை ஜாதியைச் சொல்லி இழிவாகப் பேசியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையானது. மீரா மிதுன் தொடந்து சினிமா துறையில் உள்ள முன்னணி நடிகர்கள் மீது சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். முன்னணி நடிகைகள், முகத் தோற்றத்தில் தன்னை காப்பி செய்வதாக குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த சூழலில்தான் மீரா மிதுன் பட்டியல் இனத்தைவரை இழிவாக பேசியதாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, நடிகை மீரா மிதுன் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மத்திய குற்றப் பிரிவு போலீசார், மீரா மிதுன் மீது எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளிக்கப்பட்டது. விசிக மட்டுமல்லாமல், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, திராவிடர் விடுதலைக் கழகம், புரட்சி பாரதம் போன்ற அமைப்புகளில் இருந்தும் மீரா மீது புகார்கள் அளித்தனர்.
நடிகை மீரா மிதுன் மீது பல தமிழகத்தில் பல மாவட்டங்களில் புகார்கள் அளிக்கப்பட்டதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவு போலீஸார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மீரா மிதுன் விசாரணைக்கு நேரில் ஆஜராக காவல்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், மீரா மிதுன் தலைமறைவானார்.
இதைத் தொடர்ந்து, நடிகை மீரா மிது சமூக ஊடகங்களில் வெளியிட்ட வீடியோவில், “ என்னை தாராளமாக கைது செய்யுங்கள், காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு செல்லவில்லையா என்ன? என்னை கைது செய்வது நடக்காது அப்படி நடந்தால் அது கனவில் மட்டுமே நடக்கும். எல்லாரையும் நான் தவறானவர்கள் என்று கூறவில்லை.என்னை தொந்தரவு செய்தவர்களை மட்டுமே நான் கூறினேன். என்னை தொந்தரவு செய்கிறார்கள் புகார் கொடுத்தேன் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை…” என கூறினார்.
இந்த நிலையில், நடிகை மீராமிதுன் கேரளாவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் திருவனந்தபுரம் விரைந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவு போலீஸார் மீரா மிதுனை கைது செய்தனர். போலீசார் அவை கைது செய்தபோது வீடியோ வெளியிட்ட மீரா மிதுன், “ இந்த ஆண்கள் எல்லோரும் என்னை துன்புறுத்துகின்றனர். முதலமைச்சர் அவர்களே ஒரு பொண்ணுக்கு இப்படி தான் நடக்கனுமா? ஒரு பொண்ணுக்கு நிஜமாகவே இப்படி தான் நடக்கனுமா? எல்லோரையும் வெளியே போக சொல்லுங்க.. போலீஸ்னா அராஜகம் பன்னுவீங்களா. என் போன தர முடியாது. கத்திய எடுங்க.. என்ன குத்திட்டு இங்க இருந்து என்ன வெளியே எடுத்துட்டு போங்க.. நான் இங்கேயே குத்திட்டு செத்துருவேன்.. முதலமைச்சர் அவர்களே, பிரதமர் மோடி அவர்களே, இந்த தமிழ்நாடு போலீஸ் என்ன ரொம்ப டார்ச்சர் பன்றாங்க ” என்று கூறியிருந்தார்.
மத்திய குற்றப்பிரிவு போலிசாரால் கேரளாவில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனை போலீஸ் வாகனம் மூலமாக சென்னை கொண்டு வந்தனர். சென்னை கொண்டுவந்தபோது, அதுவரை அமைதியாக வந்த நடிகை மீரா மிதுன், போலீஸார் என்னை அடித்தார்கள், கையை உடைத்தார்கள் என்று ஊடகங்களிடம் காட்டமாக புகார் கூறத் தொடங்கினார். இதையடுத்து, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, மீரா மிதுன் தனது வழக்கறிஞர் வராமல் எதுவும் பேசமாட்டேன் என்று அடிம்பிடித்ததாக தகவல் வெளியானது.இதையடுத்து, அவருடைய வழக்கறிஞரை வரவழைத்து விசாரணை நடத்தி உள்ளனர்.
இதையடுத்து, அவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் நடிகை மீரா மிதுனை ஆகஸ்ட் 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதையடுத்து, மீரா மிதுன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.