நடிகை பூஜா பட் வாங்கிய பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை அரசு மீண்டும் மீட்டது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி தாலுக்கா ஜெகதாலா கிராமத்தில் 26.12 சென்ட் நிலத்தை திரைப்பட தயாரிப்பாளரும் நடிகையுமான பூஜா பட் இடம் இருந்து மீட்டதற்கான நடவடிக்கைகள் குறித்து நீலகிரி மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஜெகதாலா என்ற கிராமத்தில் 1978-ம் ஆண்டில் பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்த குப்பன் என்பவருக்கு நிலமற்ற ஏழைகள் என்ற பிரிவின் கீழ் ஒரு ஏக்கர் அரசு நிலத்தை விவசாயம் செய்வதற்காக ஒதுக்கி அதை வேறு யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர் நிபந்தனை விதித்திருந்தார். அவர் இந்த நிலத்தை 10 ஆண்டுகள் வரை விற்பனை செய்யக் கூடாது என்று நிபந்தனையைக் கட்டாயமாக்கியது.
இருப்பினும், குப்பன் நிபந்தனையை மீறி தனி நபரான சி.ஓ.-க்கு நிலத்தை விற்பதற்கான பவர் ஆஃப் அட்டர்னியை உரிமையை எழுதிக் கொடுத்ததாக அதிகாரிகள் கூறினர். பின்னர், அவர் இந்த நிலத்தை மற்றொரு தனிநபரான ராமசாமிக்கு அக்டோபர் 1988-ல் விற்பனை செய்தார். அதற்கு பிறகு, அந்த நிலம் கைமாறியது. 1999-ல் நடிகை பூஜா பட் அந்த நிலத்தின் ஒரு பகுதியை வாங்கினார்.
இதேபோல், பிங்கிள் ரமேஷ் ரெட்டியின் தாயார் 1999-ல் 27 சென்ட் நிலத்தை வாங்கினார். மேலும், 2010-ல் அவருக்கு 13.84 சென்ட் நிலத்தை தான பத்திரம் மூலம் அளித்தார். ஆனால், ஆனால், பட்டியல் இனத்தைச் சேர்ந்த நிலமற்ற ஏழைக்கு ஒதுக்கி விவசாயம் செய்வதற்காக நிலம் வழங்கிய மாவட்ட நிர்வாகத்தின் நிபந்தனையை மீறியதாகக் கூறி மார்ச் 21, 2016-ல் கோத்தகிரி வட்டாட்சியர் நிலத்தை அரசு மீட்டெடுப்பதற்கு உத்தரவு பிறப்பித்தார்.
இதைத் தொடர்ந்து, நடிகை பூஜா பட் மற்றும் பலர் வட்டாட்சியரின் உத்தரவை எதிர்த்து 2017-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, உயர் நீதிமன்றா நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் இந்த ஆண்டு அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தார். மேலும், மனுதாரர்கள் மேல்முறையீடு செய்யலாம், அதேபோல, அரசு சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.
இந்த தீா்ப்பை எதிா்த்து நடிகை பூஜா பட் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி கங்காபுா்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவா்த்தி அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த நிலத்தை மீட்டு விட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதை கடுமையாக மறுத்த பூஜா பட் தரப்பு வழக்கறிஞர் அந்த நிலம் இன்னும் பூஜா பட் வசம் தான் உள்ளதாக தெரிவித்தார். இந்த முரண்பட்ட வாதங்கள் காரணமாக நிலத்தை மீட்டது தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனா். அதுவரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என இரு தரப்பினருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
மூத்த வழக்கறிஞர் அப்துல் சலீம் சார்பில் பக்கத்து நில உரிமையாளர் பிங்கிள் ரமேஷ் ரெட்டி தாக்கல் செய்த மற்றொரு ரிட் மேல்முறையீட்டிலும் நீதிபதிகள் இதேபோன்ற உத்தரவை பிறப்பித்தனர். மேலும், இணைக்கப்பட்ட அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் அடுத்த வாரம் ஒன்றாக விசாரிக்க உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“