நடிகை சனம் ஷெட்டி பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடி தண்டனை தரக்கோரியும் போராட்டம் நடத்த காவல் துறை அனுமதி அளிக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) மனு அளித்தார்.
நடிகை சனம் ஷெட்டி பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடி தண்டனை தரக்கோரியும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக காவல் துறை அனுமதி அளிக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை சனம் ஷெட்டி மனு அளித்தார்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய சனம் ஷெட்டி கூறியதாவது: “பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் குறித்து பேச கஷ்டமாக உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 4 வழக்குகள் பதிவாகி உள்ளன. கொல்கத்தாவில் நடந்த பாலியல் வன்கொடுமைக்காக இங்கு ஏன் போராட வேண்டும் என்று கூறுகிறார்கள்.
நேற்று கிருஷ்ணகிரியில் 13 மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்று உள்ளது. இதில் அப்பள்ளியின் முதல்வர் சம்பந்தப்பட்டு உள்ளார். பெங்களூருவில் 21 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்று உள்ளது. மகாராஷ்டிராவில் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்று உள்ளது.
நிர்பயா வழக்கில் 7 ஆண்டுகளுக்கு பிறகுதான் தண்டனை வழங்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடியாக தண்டனை தரக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.” என்று கூறினார்.
கேரளாவில் மலையாள சினிமா உலகில் நடைபெறும் பாலியல் சுரண்டல் குறித்து நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பேசிய நடிகை சனம் ஷெட்டி, “நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த விவரம் எனக்கு தெரியாது. ஆனால். அதை நான் வரவேற்கிறேன். இது போன்று ஒரு அறிக்கையை அவர்கள் கொண்டு வந்ததற்கு ஹேமாவுக்கும், கேரள அரசுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய நடிகை சனம் ஷெட்டி, “தமிழ் திரையுலகிலும் பாலியல் ரீதியான அத்துமீறல்கள் உள்ளன. பட வாய்ப்புகளுக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லும் நிலை தமிழ் திரையுலகிலும் உள்ளது. கேரளாவை போன்று தமிழ் திரையுலகிலும் விசாரணை கமிட்டி அமைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மேலும், “அட்ஜெஸ்ட்மெண்ட் கேரள சினிமாவில் மட்டுமில்லை தமிழ் சினிமாவிலும் இருக்கு, என்னிடம், இதுபோல அட்ஜஸ்ட்மென்ட் கேட்டவர்களை, அந்த இடத்திலேயே செருப்பால அடிப்பேன் டா நாயே என்று சொல்லி இருக்கேன். அதற்காக சினிமாவில் அனைவரும் அப்படித்தான் என்று சொல்லவில்லை. ஒழுக்கமான எத்தனையோ பேர் இருக்கிறார்கள்” என்று நடிகை சனம் ஷெட்டி கூறினார்.
“தினம் தினம் பாலியல் சீண்டல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு பயந்து, பெண்களை வெளியில் அனுப்பாமல், அந்த ஆடைகளை போடாதே, யாரையும் நம்பாதே என்று சொல்லி வளர்த்துக்கொண்டு இருக்கிறோம். அடிப்படை மாற்றத்தை ஆண்களின் மனதில் கொண்டு வர வேண்டும். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் அதற்காகத்தான் இந்த போராட்டம், இது தான் சரியான நேரம், அடுத்த தலைமுறையிலாவது மாற்றம் வர வேண்டும்” நடிகை சனம் ஷெட்டி செய்தியாளர்களிடம் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.