நடிகை தொடர்ந்த பாலியல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சீமான் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்த நிலையில், என்னை விட்டுவிடுங்கள், இது என் கடைசி வீடியோ, இனி சீமான் மீது புகார் கொடுக்க மாட்டேன் என நடிகை கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.
மேலும், நடிகை வெளியிட்டுள்ள வீடியோவில், “இனி எந்த புகாரும் கொடுக்க மாட்டேன், புகார் கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் யாரும் எடுக்கப்போவதில்லை. இதனால், எந்த போராட்டமோ, எந்த வித புகாரோ கொடுக்கப்போவதில்லை. இது தான் என் கடைசி வீடியோ, எனக்கு நியாயம் கிடைக்காது. எனக்கு நியாயம் கிடைக்கவும் விடமாட்டார்கள் என்று கண்ணீர் கூறியுள்ளார்.
நடிகை தொடர்ந்த பாலியல் வழக்கில், வழக்கைத் திரும்பப் பெற முடியாது என்றும் சீமானை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், 2 மாதங்களுக்குள் இந்த விவகாரத்துக்கு பேசி முடிவு காண அறிவுறுத்திய நீதிபதிகள், இது தொடர்பாக புகார்தாரரும், தமிழ்நாடு அரசும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில், சீமான் மீது குற்றம்சாட்டி புகார் அளித்த நடிகை, “என்னை விட்டுவிடுங்கள், இது தான் என் கடைசி வீடியோ, எனக்கு நியாயம் கிடைக்காது. கிடைக்கவும் விடமாட்டார்கள். இதை தாண்டி இனி எந்த வித போராட்டமும் நான் பண்ண மாட்டேன். இதுவரை மக்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி” என்று கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். நடிகை வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் நடிகை கண்ணீர் மல்க பேசியிருப்பதாவது: “நேற்று உச்ச நீதிமன்றத்தில் என்னாச்சு என்பதை மக்களுக்கு சொல்வதற்கு விருப்பப்பட்டேன். ஏனென்றால், நேற்று வந்த தீர்ப்பை வைத்து, செட்டில்மெண்ட் என்று சொல்லி எல்லாரும் எழுத ஆரம்பித்துவிடுவார்கள். நடிகைக்கு இரவோடு இரவாக சீமான் ரூ.10 கோடி செட்டில்மண்ட் பண்ணிட்டாரு என்று சொல்வார்கள். ஈழத்தமிழர்களோட கஷ்டப்பட்ட பணத்தை எல்லாம், அவளுக்கு தான் கொடுத்துக்கொண்டு இருக்கிறார் என்று அபாண்டமாக என் மீது பழியை போட்டுவிடுவார்கள். அதனால், நான் இப்போது இதற்கு ஒரு தெளிவினை சொல்லிவிடுகிறேன்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் எப்.ஐ.ஆர் தள்ளுபடி செய்ய சொல்லி வழக்கு தொடர்ந்திருந்தபோது, என் சார்பில் ஒரு வழக்கறிஞர் வாதாடினார். அவர் என் தரப்பு பாதிப்புகளை எடுத்து சொல்லி, அதற்கு பிறகு தான் நீதிபதி உத்தரவு கொடுத்தார்.
நேற்று உச்ச நீதிமன்றத்தில் சீமான் ஒரு வழக்கை கொடுத்திருந்தார் இல்லையா, அந்த வழக்கில் என் சார்பாக யார் ஆஜரானார்கள். என் சார்பாக யாராவது சென்று, இந்த பெண் இந்த மாதிரி பாதிக்கப்பட்டிருக்கிறார். சும்மா சும்மா எல்லாம் வழக்கு போடவில்லை. ரொம்ப துன்பப்படுத்தி இருக்கிறார்கள். அந்த பெண் சாகும் அளவுக்கு போயிருக்கிறார். நேற்று வரைக்கும் அந்த பெண்ணை பாலியல் தொழிலாளி என்று தான் சொல்கிறார்கள் என்று என் தரப்பில் யாராவது சொல்லியிருக்க வேண்டும் அல்லவா. ஆனால், யாருமே சொல்லவில்லை. இதனால், சீமான் சொன்ன கோரிக்கையை வைத்து அதனை ஏற்று கோர்ட்டில் ஜட்ஜ்மெண்ட் கொடுத்து இருக்கிறார்கள்.
இப்போது நான் என்ன கேட்கிறேன் என்றால், நான் ஏதோ சீமானிடம் பேசிவிட்டால், பார்த்தீர்களா காசுக்காக செய்கிறாள் என்று சொல்லி எல்லாரும் கத்துகிறீர்களே, நேற்று ஏன் என் சார்பாக யாருமே உச்ச நீதிமன்றத்தில் போராடவில்லை. இந்த கேள்வி கேட்கும் போது, நான் எல்லாருக்கும் என்ன புரிய வைக்கிறேன் என்றால், முந்தாநாள் நான் கதறி அழுதேன், அது ஏன் என்று தெரியுமா? எனக்கு எந்த நீதியும் கிடைக்காது, எந்த நியாயமும் கிடைக்காது இந்த வழக்கில். கிடைக்கவும் விடமாட்டார்கள். இத புரிந்துகொண்டேன். சரியா, இதை தாண்டி இனி எந்த வித போராட்டமும் நான் பண்ண மாட்டேன். சீமானிடம் போய் யாரும், இந்த பெண் ரொம்ப கஷ்டப்படுது. இந்த பெண்ணின் சாபத்தை கட்டிக்காத என்று சொல்லமாட்டார்கள் எல்லாரும் அவளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கஷ்டப்படுத்து, அசிங்கப்படுத்து, கஷ்டப்படுத்து என்ற ரூட்டில் தான் எடுத்து செல்வதால், அந்த அசிங்கத்துக்குள்ள இறங்கி நான் போராட வேண்டும் என்று அவசியம் எனக்கு கிடையாது.
இதுவரைக்கும் எனக்கு மக்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. நடிகை இப்போது கூட ஏமாற்றப்பட்டுவிட்டார் என்று மக்கள் நன்கு புரிந்துகொண்டு இருப்பார்கள். எல்லாரும் புரிந்துகொள்வார்கள். இனி எந்த புகாரும் கொடுக்க மாட்டேன் என்று நான் சொல்லிவிட்டேன். புகார் கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் யாரும் எடுக்கப்போவதில்லை. இதனால், எந்த போராட்டமோ, எந்த வித புகாரோ கொடுக்கப்போவதில்லை. இது தான் என் கடைசி வீடியோ, எனக்கு நியாயம் கிடைக்காது, எனக்கு நியாயம் கிடைக்கவும் விடமாட்டார்கள். இவ்வளவு தான். இதுதான் என்னுடைய இரண்டு வார்த்தை. இதுதான் என் கடைசி வீடியோ” என்று நடிகை கண்ணீர் மல்க கூறியுள்ளார்.