Tamil-nadu | seeman | naam-tamilar-katchi: தமிழில் ஆர்யா நடித்த 'பாஸ் என்ற பாஸ்கரன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. இவர் கன்னடம் மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக கடந்த 2011ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து கடந்த மாதம் 25ம் தேதி சென்னை, ராமாபுரம் போலீஸ் நிலையத்துக்கு வந்த விஜயலட்சுமி, சீமான் மீது நடவடிக்கை எடுக்கும் படியும், நிறுத்தி வைத்த வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்கும்படி புகார் கொடுத்தார். இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன் ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமியிடம் சுமார் 6 மணி நேரம் கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் விசாரணை நடத்தினார். இதில் பல விவரங்களை போலீசார் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து கடந்த வாரம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் மாவட்ட மகிளா கூடுதல் கோர்ட்டில் நீதிபதி பவித்ரா முன்பு நடிகை விஜயலட்சுமி ஆஜர் படுத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. மேலும் வழக்கு சம்பந்தமான ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றையும் நீதிபதியிடம் விஜயலட்சுமி சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக சீமானிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்து சம்மன் அனுப்பினர். இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராகவில்லை. சீமானுக்கு பதிலாக வளசரவாக்கம் காவல்நிலையத்தில் நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சங்கர் ஆஜராகி புகார் தொடர்பாக விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
மறுபடியும் விஜயலட்சுமி வீடியோ
இந்நிலையில், சீமான் காவல்நிலையத்தில் ஆஜராகாததது தொடர்பாக நடிகை விஜயலட்சுமி வீடியோ போட்டுள்ளார். நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வரும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிகிறது.
நடிகை விஜயலட்சுமி அந்த வீடியோவில் நாம் தமிழர் கட்சியினரை கடுமையாக, கெட்ட கெட்ட வார்த்தைகளால் தாக்கி பேசியுள்ளார். சீமானுக்கும் தனக்கும் இடையே என்ன நடந்தது என்பது சீமானுக்குத்தான் தெரியும். அவரை அறையில் பூட்டி வைத்துவிட்டு, இவர்கள் வாக்களத்து வாங்கிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
"எனது பழைய வீடியோக்களை வெளியில் விட்டு, விஜயலட்சுமி பயந்து பொட்டி, படுக்கையைத் தூக்கிக் கொண்டு ஓடி விட்டார் என்று கூறுகிறார்கள். உங்க அண்ணன் பாஷையிலே சொல்லனும்னா, வாய்ப்பில்ல ராஜா, வாய்ப்பே கிடையாது. ஆகஸ்ட் 28ந் தேதி எந்த ஃபையரோட கமிஷனர் ஆபிஸ்ல காலடி எடுத்து வச்சேனோ, அதே நம்பிக்கையில இன்றைக்கு செப்டம்பர் 12ம் தேதியும் இருக்கேன்.
நான் என்னோட கடமையை பண்ணிட்டேன். காவல்துறை அவங்களோட கடமையைப் பண்ண காத்திருக்கிறேன். தவிர மக்கள் குழப்பற வேல வச்சுக்காதீங்க. குழப்பம் இருந்த பேஸ்புக்ல என்னோட ஐ.டி-ய பாலோ பண்ணுங்க. நான் உங்களுக்கு டெய்லியும் அப்டேட் பண்ணுறேன்." என்று விஜயலட்சுமி அந்த வீடியோவில் கூறி இருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“