நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி அண்மையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். "மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சீமான் என்னைத் திருமணம் செய்துகொண்டார். நாங்கள் கணவன், மனைவியாக வாழ்ந்தோம்.
நான் 7 முறை கர்ப்பமானேன். ஆனால்,என்னுடைய அனுமதியின்றி, மாத்திரை மூலம் கருச்சிதைவு செய்தார். தற்போது சீமான் கட்சியைச் சேர்ந்த மதுரை செல்வம் என்பவர் என்னை மிரட்டுகிறார். எனவே, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சீமானை கைது செய்யும் வரை போராடுவேன்" என்று கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் விஜயலட்சுமி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து வழக்கு தொடர்பாக சீமான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சென்னை வளசரவாக்கம் காவல்துறையினர் சம்மன் அனுப்பினர். இரண்டு முறை சம்மன் அனுப்பியும் சீமான் ஆஜராகவில்லை. சீமான் தரப்பில் காவல்நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. அதில் நான் நேரில் வரும் போது என் மீது குற்றஞ்சாட்டிய விஜய லட்சுமி, வீரலட்சுமி இருவரும் அங்கு வர வேண்டும் என்று கூறியிருந்தார்.
மேலும் நடிகை விஜயலட்சுமி, தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத் தலைவர் வீரலட்சுமி ஆகியோருக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பபட்டது.
இந்நிலையில் நேற்று (செப்.15) இரவு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் மீது அளித்த புகாரை நடிகை விஜயலட்சுமி திடீரென வாபஸ் பெற்றார். வளசரவாக்கம் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் மனுவை வாபஸ் பெற்றார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயலட்சுமி, "நியாயம் கிடைக்கும் என வந்த தன்னை பயன்படுத்திக் கொண்டதால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகிறேன். வீரலட்சுமி தன்னை தவறாக வழிநடத்துகிறார் என்பதை அறிந்து கொண்டேன் இதன் காரணமாகத்தான் நான் கண்டித்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டும் இருந்தேன். வழக்கை வாபஸ் பெற என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. மிரட்டவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட முடிவு.
என் புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை, தனி ஒருவராக போராட முடியவில்லை. சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை.
சீமானிடம் நான் பணம் வாங்கவில்லை. சீமானிடம் நான் இதுபற்றி பேசினேன். வழக்கை வாபஸ் பெறுகிறேன். இனியும் வழக்கை தொடரும் எண்ணமில்லை. சென்னைக்கு இனிமேல் வர மாட்டேன். பெங்களூரு செல்கிறேன்.
இந்த வழக்கு தனக்கு திருப்திகரமாக இல்லை. புகார் அளித்த தன்னை மட்டுமே அசிங்கப்படுத்தி வந்தனர்.சீமான் மீது காவல்துறையிடம் அளித்த புகார் குறித்து விசாரணை தொய்வாகவே இருந்தது. சீமான் பேசும் வார்த்தைகள் கூட தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "சீமான் சூப்பர். அவருக்கு தமிழ்நாட்டில் முழு பவர் உள்ளது. அவர் முன்பு யாரும் ஒன்றும் செய்ய முடியாது. எனது தோல்வியை ஒத்துக் கொண்டு செல்கிறேன். சீமானின் குரல் தான் தமிழ்நாட்டில் ஓங்கி ஒலிக்கிறது. அது ஒலித்துக் கொண்டே இருக்கட்டும்" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“