அமெரிக்க நீதித்துறை சுமத்தியுள்ள குற்றச்சாட்டின்படி, மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு அதானி குழுமம் அரசுகளுக்கு லஞ்சம் வழங்கிய ஐந்து மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக விசாரிக்குமாறு மாநில அரசை சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மோடி தலைமையிலான பாஜக அரசின் ஆதரவோடும் ஒத்துழைப்போடும் தொடர்ச்சியாக பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு வரும் அதானி நிறுவனம் தற்போது மீண்டும் ஒரு பெரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. அதானி நிறுவனத்தின் மீது பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்த அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு எதிரான கைது வாரண்டையும் பிறப்பித்துள்ளது.
சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்கு அதானி குழுமத்தால் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளன. மோடி அரசின் நிர்ப்பந்தத்தினால் அதானி நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த எல்ஐசி நிறுவனம் ரூ.12,000 கோடியை இழக்க நேரிட்டுள்ளது
இந்நிலையில், வழக்கம் போல அவர் தப்பிவிடாமல் சட்ட ரீதியான உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு அவரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதையும், அதானி நிறுவன ஊழலுக்கு துணை நின்ற அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரையும் கைது செய்திடவும், இவ்வழக்கினை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தி வெளிப்படையான புலன் விசாரணை மேற்கொள்வதையும் மத்திய அரசு உறுதி செய்திட வேண்டும்.
அதானி குழுமத்தால் லஞ்சம் வழங்கப்பட்ட நிறுவனங்களில் தமிழ்நாடு மின்வாரியத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளதால் இது தொடர்பான முழு விசாரணைக்கு உத்தரவிட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மை விபரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும். கூடுதலான கட்டணத்தில் அதானி நிறுவனத்துடன் மின்சார கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.
மேலும், அதானியை மத்திய அரசு கைது செய்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, நவ., 27ல், சென்னையிலும், மறுநாள், மாவட்ட தலைமை அலுவலகத்திலும், சி.பி.எம் போராட்டம் நடத்த உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“