தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளராக இருந்து வந்த அமுதா ஐ.ஏ.எஸ் வருவாய்த் துறை செயலாளராக பணி மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு முதலமைச்சரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளராக பதவி வகித்தவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா. 1994-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியான அமுதா, கடந்த அ.தி.மு.க ஆட்சியிலும் சிறப்பாக செயல்பட்டவர். நேர்மையான அதிகாரி அறியப்பட்டவர். இடையில் மத்திய அரசு பணிகளுக்கு சென்று மீண்டும் மாநில அரசு பணிக்கு திரும்பினார். இதையடுத்து, அவர் தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டு பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து ஜூலை 16-ம் தேதி தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டிருந்தார். அதன்படி, ‘தமிழக உள்துறை செயலாளர் அமுதா வருவாய் துறை செயலாளராக மாற்றப்பட்டார். தமிழகத்தின் புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமிக்கப்பட்டார்.
அதே போல, முதலமைச்சரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக இருந்த டி.மோகன், உணவுப்பொருள் வழங்கல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, வருவாய்த்துறை செயலர் பி. அமுதாவுக்கு முதல்வரின் முகவரி திட்டம் மற்றும் மக்களுடன் முதல்வர் திட்டம் உள்ளிட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் இதர திட்டங்களுக்கான சிறப்பு அதிகாரி பொறுப்பு ஆகியவை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று (ஜூலை 19) வெளியிட்ட அறிவிப்பில், வருவாய்த்துறை செயலர் பி.அமுதாவுக்கு முதல்வரின் முகவரி திட்டம் மற்றும் மக்களுடன் முதல்வர் திட்டம் உள்ளிட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் இதர திட்டங்களுக்கான சிறப்பு அதிகாரி பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“