குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குநர் ரவி, குழந்தை ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு எதிரான போராட்டத்தில் கடுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். குழந்தைகள் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பாயும் என்ற இவரின் எச்சரிக்கை அனைத்து செய்திதாள்களிலும் தலைப்பானது. மேலும், காவலன் செயலியை தமிழகத்தில் பட்டித்தொட்டி எங்கும் பரப்பிய முக்கிய பங்கும் இவருக்கு உண்டு.
இந்நிலையில், காவல் அதிகாரி ரவியின் புகைப்படம் மற்றும் போலியான ப்ரொபைல் மூலம் பேஸ்புக் அக்கவுண்ட்டை உருவாக்கிய மர்ம நபர்கள் பண மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது.
அதிக வட்டி, லட்சக்கணக்கில் லாபம், கொரோனா பொது முடக்கநிலை காலத்தில் பணத்தை நல்ல முறையில் எப்படி முதலீடு செய்வது? போன்ற போஸ்ட்கள் காவல் அதிகாரி ரவியை பேஸ்புக்கில் பின்தொடர்பவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த முதலீடு தொடர்பான செய்தியை வாசித்து சிலர் முகம் சுளித்துள்ளனர். சந்தேகமடைந்த அதில் சிலர் செய்தியை உடனடியாக காவல்துறை அதிகாரி ரவியிடம் கொன்று சென்றுள்ளனர். இருப்பினும், சிலர் குறுஞ்செய்தியை நம்பி, பணப்பரிமாற்றம் செய்துள்ளதாகவும் அறியப்படுகிறது.
விஷயத்தை எச்சரிக்கையாய் அணுகிய காவல் அதிகாரி, சமூக ஊடகங்களில் தம்மைப் பின்தொடர்பவர்கள் எந்தவிதமான பணமும் செலுத்த வேண்டாம், லாபம் என்ற பெயரில் பணத்தை தொலைக்க வேண்டாம் என்று எச்சரித்தார். மேலும், இதுதொடர்பான முறையான புகாரை சென்னை போலீசில் பதிவு அளித்தார்.
தகவல் தொழில்நுட்ப சட்டம், ஐபிசி பிரிவு 420 (மோசடி) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சந்தேகப்படும் நபர்களில் ஒருவர் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து செயல்படுவதை புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.