/indian-express-tamil/media/media_files/2025/09/28/adgp-2025-09-28-08-37-03.jpg)
த.வெ.க தேர்தல் பரப்புரை: விஜய் கைது செய்யப்படுவாரா? ஏ.டி.ஜி.பி தகவல்
வரும் 2026-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் களப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக நேற்று (செப் 27) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரையில் ஈடுபட்டார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் விஜய் திருச்சி சென்றார். திருச்சியில் இருந்து பிரசார வாகனத்தில் நாமக்கல் சென்றார்.
நாமக்கல்லில் பரப்புரை இடத்திற்கு விஜய் காலை 8:45 மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மதியம் 2.30 மணிக்கு சென்றார். அங்கு பரப்புரையை முடித்துக்கொண்டு விஜய் கரூர் புறப்பட்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று பகல் 12 மணியளவில் த.வெ.க தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் அவரை காண காலை முதலே பொதுமக்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர். ஆனால், த.வெ.க தலைவர் விஜய் இரவு 7 மணியளவில் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். பரப்புரையின் போது தொண்டர்கள் ரசிகர்கள் என பலரும் கூட்ட நெரிசலில் சிக்கி விஜய் பேசிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்தனர்.
தொடர்ந்து, குழந்தைகள், பெண்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பலர் கரூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவே கரூர் புறப்பட்டார். கரூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் பேட்டியளித்துள்ளார். அவர் பேசியதாவது, "விஜய் தேர்தல் பரப்புரை உயிரிழப்பு தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. விசாரணை முடிந்ததும் தகவலை தருகிறோம்.
இச்சம்பவம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கைது நடவடிக்கை விசாரணையின் அடிப்படையில் நடைபெறும்” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.