சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட காவல்துறை ஏ.டி.ஜி.பி-யின் வாகனத்திற்கு போக்குவரத்துக் காவல்துறை ரூ.500 அபராதம் விதித்திருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.
திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின் அடிப்படையில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டது. அதன்படி, கடந்த அக்டோபர் 21-ம் தேதி முதல் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களிடம் தீவிரமாக புதிய அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது.
புதிய அபராதத் தொகை வசூலிக்கப்படும்போது, வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்து காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவது வழக்கமான நிகழ்வாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் ஐ.பி.எஸ் அதிகாரியான ஏ.டி.ஜி.பி-யின் வாகனம் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதால், போக்குவரத்து காவல்துறை ரூ.500 அபராதம் விதித்த சம்பவம் கவனத்தைப் பெற்றுள்ளது.
செல்போன் இணையம் பயன்படுத்துவது பரவலாகி உள்ளதால், பொதுமக்கள் பலரும் சமூக ஊடகங்கள் வழியாக காவல்துறையிடம் புகார் அளித்து வருகின்றனர். காவல்துறையும் பொதுமக்களின் புகார்களை கவனித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், பொதுமக்களில் ஒருவர் ட்விட்டரில் பெருநகர சென்னை காவல்துறைக்கு டேக் செய்து, ஐ.பி.எஸ் அதிகாரியான தமிழ்நாடு காவல்துறை ஏ.ஜி.ஜி.பி-யின் வாகனம் ஒன்வேயில் சென்று போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதை புகைப்படத்துடன் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், சென்னை போக்குவரத்து காவல்துறை, ஏ.டி.ஜி.பி-யின் வாகனத்தை இயக்கிய ஓட்டுநருக்கு ரூ.500 அபராதம் விதித்து வசூலித்துள்ளது. சென்னை திருவான்மியூர் பகுதியில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட இந்த கார் ஏ.டி.ஜி.பி ஒருவர் பயன்படுத்தும் கார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அந்த வாகனம் ஒருவழிப்பாதையில் எதிர் திசையில் சென்று போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டபோது, ஏ.டி.ஜி.பி வாகனத்தில் இல்லை என்பதை போக்குவரத்துக் காவல் துறையினர் உறுதி செய்துள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட காவல்துறை ஏ.டி.ஜி.பி-யின் வாகனத்திற்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டிருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"