எளிய மக்கள் அதிகாரத்தை பெறுவதற்கான பிரசாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம் என ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் ஆதவ் அர்ஜுனா, அரசியல் கட்சிகளின் தேர்தல் வியூக அமைப்பாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு தேர்தல் வியூகம் அமைப்பதற்காக பணியாற்றினார். இதன் தொடர்ச்சியாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்த அவருக்கு, துணைப் பொதுச்செயாலளர் பதவி வழங்கப்பட்டது.
அவ்வப்போது, ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துகள் தி.மு.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. குறிப்பாக, அண்மையில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவின் போது அவர் பேசிய கருத்துகள், தி.மு.கவை நேரடியாக விமர்சிக்கும் வகையில் இருந்தன. தமிழத்தில் மன்னராட்சி முறை அகற்றப்பட வேண்டும் என அவர் நூல் வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார். இதே நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் கலந்து கொண்டார்.
ஆதவ் அர்ஜுனாவின் இந்த கருத்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல தி.மு.க நிர்வாகிகள் எதிர்வினையாற்றி இருந்தனர். இதன் தொடர்ச்சியாக, ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து 6 மாதங்கள் நீக்கப்படுவதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் நேற்று அறிவித்தார். கட்சியின் அறிவுறுத்தல்களை மீறி தொடர்ச்சியாக, வி.சி.கவின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் ஆதவ் அர்ஜுனா பேசி வருவதால் அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டதாக திருமாவளவன் விளக்கம் அளித்தார்.
ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு
— Thol. Thirumavalavan (@thirumaofficial) December 9, 2024
------------------------------------
1. கட்சியின் துணை பொதுச் செயலாளர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது.
2. இது… pic.twitter.com/NwHByK10XB
இதற்கு பதிலளிக்கும் விதமாக 'ஆயிரம் கைகள் மறைத்தாலும், ஆதவன் மறைவதில்லை' என அறிக்கை ஒன்றை ஆதவ் அர்ஜுனா வெளியிட்டார். இது அரசியல் களத்தில் பேசுபொருளானது.
ஆயிரம் கைகள் மறைத்தாலும்…!
— Aadhav Arjuna (@AadhavArjuna) December 9, 2024
'அதிகாரத்தை அடைவோம்’ என்று எழுச்சித் தமிழர் எந்த முழக்கத்தோடு இந்த கட்சியைக் கட்டமைத்தாரோ அந்த அதிகாரத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் எனது பயணத்தைக் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்தேன். எனக்கு… pic.twitter.com/bxmcTsrDup
இந்த சூழலில் ஆதவ் அர்ஜுனா மீண்டும் ஒரு பதிவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்துடன் எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம்!' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற முழக்கத்துடன் எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம்! pic.twitter.com/vTkmTxTND8
— Aadhav Arjuna (@AadhavArjuna) December 10, 2024
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் தி.மு.கவுடன் இணைந்து பணியாற்றிய தகவல்கள் மற்றும் புகைப்படங்களை ஆதவ் அர்ஜுனா இணைத்துள்ளார்.
இதன் மூலம் ஆதவ் அர்ஜுனாவின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் இடையே விவாதம் எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.