தமிழ்நாட்டில் அடுத்த 63 வாரங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தான், எதிர்க்கட்சி தலைவராக செயல்படப் போகிறார் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்று (பிப் 29) செங்கல்பட்டு மாவட்டம், பூஞ்சேரியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் நடைபெற்றது. இதில் ஆதவ் அர்ஜுனா உரையாற்றினார்.
அவர் பேசுகையில், "இப்போது விஜய்யை நாம் தளபதி என்று அழைக்கிறோம். இனி விஜய்யை தலைவர் என்று அழைக்கக் கூடிய பரிணாமத்தை நோக்கி நாம் பயணிப்போம். தமிழக வெற்றிக் கழகத்தில் எனது முதல் உரை இது தான். தந்தை பெரியார், அம்பேத்கர், காமராஜர், அஞ்சலையம்மாள், வேலுநாச்சியார் ஆகியோரின் கொள்கை மற்றும் தியாகங்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்திக் கொள்கிறேன்.
பிறப்பால் ஒருவர் தலைவர் ஆகக் கூடாது. மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்கிற உண்மையை கூறியதற்கு பல்வேறு சூழ்ச்சிகள் என்னை சூழ்ந்து கொண்டன. அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து எனது பணி தொடங்க வேண்டும் என விஜய்யிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் எதற்காக த.வெ.க-வில் சேர்ந்தேன் என இங்கு பதிவு செய்ய வேண்டும்.
அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆகியோரிடம் இணைக்கப்பட்டவன் நான். அந்த கொள்கை வழியில் பல அரசியல் கட்சிகளில் பணி செய்த அனுபவம் எனக்கு இருக்கிறது. ஆனால், பெரியாரை போன்று அம்பேத்கரை அரசியல் மேடையில் யாரும் ஏற்றியது இல்லை. ஆனால், ஆண் மற்றும் பெண் போன்ற வேறுபாடுகள் இன்றி தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்கள் விளங்குகிறார்கள்.
விஜய் தனது உச்சபட்ச சினிமா அந்தஸ்தை விட்டு, இந்த கொள்கைகள் வழியில் நடக்க வேண்டும் என புதிய அரசியலை உருவாக்க நினைத்தார். அந்த புரிதலோடு தான் என்னை தமிழக வெற்றிக் கழகத்தோடு இணைத்துக் கொண்டேன். இனி அடுத்த 63 வாரங்களுக்கு நாம் தான் எதிர்க்கட்சி. விஜய் தான் எதிர்க்கட்சி தலைவராக இருக்கப் போகிறார்.
1967-ல் அண்ணா ஏற்படுத்தியது போல், 1977-ல் எம்.ஜி.ஆர் ஏற்படுத்தியது போல் மீண்டும் ஒரு அரசியல் பிளவு ஏற்படப் போகிறது. அதற்கான அஜெண்டா மற்றும் பிளானிங் தயாராக உள்ளது. இன்னும் பல தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வரப் போகிறார்கள். இன்னும் பல பூகம்பங்கள் அரசியலில் நடக்கப் போகிறது" எனத் தெரிவித்தார்.