ஆதி திராவிட மாணவர்கள் கல்விக் கட்டணம்: ஆக.30க்குள் திருப்பித் தர ஐகோர்ட் உத்தரவு!

Adi dravida students, Anna university engineering colleges : 2017 - 18 மற்றும் 2018 - 2019 ஆம் கல்வியாண்டில் தனியார் பொறியியல் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்த ஜோதிகா, அன்புச்செல்வி உள்பட 114 மாணவிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்

By: July 1, 2019, 7:15:50 PM

தனியார் பொறியியல் கல்லூரிகளில் 2017 – 2018 ஆம் ஆண்டில் நிர்வாக ஒதுக்கீட்டில் படித்த ஆதிதிராவிட மாணவ – மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தை ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் திருப்பி தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் வகையில், கல்வி உதவித் தொகை முழுமையாக திருப்பி வழங்கும் திட்டம், 2012 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

பின்னர், இதுசம்பந்தமான அரசாணையில் தமிழக அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி திருத்தம் கொண்டு வந்தது. அரசு ஒதுக்கீட்டில் தனியார் பொறியியல் கல்லூரியில் சேரும் தாழ்த்தப்பட்ட மற்றும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு, அரசு நிர்ணயம் செய்த கட்டணம் மட்டுமே திருப்பி செலுத்தப்படும் எனவும் கூடுதல் கட்டணம் கல்லூரிகள் வசூலித்தால் அதனை மாணவர்கள் தான் செலுத்த வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அரசு நிர்ணயித்துள்ள 85 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை தங்களுக்கு உதவித் தொகையாக வழங்க உத்தரவிடக் கோரியும், 2017 – 18 மற்றும் 2018 – 2019 ஆம் கல்வியாண்டில் தனியார் பொறியியல் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்த ஜோதிகா, அன்புச்செல்வி உள்பட 114 மாணவிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசாணையை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது என தெரிவித்து 2017- 2018 கல்வியாண்டில் தனியார் பொறியியல் கல்லுரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கு முழு கட்டணத்தை திருப்பி தர வேண்டும் எனவும் 2018- 2019 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கையில் புதிய அரசாணை அமல்படுத்தலாம் என உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றம் உத்தரவின் படி 2017- 2018 ஆம் ஆண்டு தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்த தங்களுக்கு தமிழக அரசு கல்வி கட்டணத்தை திருப்பி அளிக்கவில்லை என கூறி சக்திவேல், புஷ்பா உள்ளிட்ட 210 மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் தங்களின் கல்வி கட்டணத்தை திரும்ப அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கந்தன் துரைச்சாமி, விஜய் ஆனந்த் ஆகியோர் நீதிமன்றம் உத்தரவிட்டும் மாணவர்களுக்கு உரிய கல்வி கட்டணத்தை அரசு திரும்ப வழங்கவில்லை. எனவே உடனே வழங்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டனர்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்களில் தனியார் பொறியியல் கல்லுரிகள் மாணவர்கள் எந்த தேதியில் சேர்த்தார்கள் என்பது உள்ளிட்ட விபரங்களை சரிபார்த்து வருவதாகவும், இந்த பணிகள் முடிவடைந்த பிறகு அரசாணை வெளியிடுவதற்கு முன்னர் கல்லூரியில் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கட்டணம் திரும்ப வழங்கபடும் என தெரிவித்தார்.

இதனையடுத்து அரசின் உறுதியை பதிவு செய்து கொண்ட நீதிபதி 2017-2018 மாணவர்கள் சேர்க்கை சரிபார்த்து வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என தெரிவித்து வழக்கை முடித்துவைத்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Adi dravida students college fee case chennai high court anna university

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X