மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் புதன்கிழமையுடன் (மார்ச் 27) நிறைவடைந்த நிலையில், அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடும் தென்காசி தொகுதியில் அதே பெயரில் 4 கிருஷ்ணசாமிகள் சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். அதே போல, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் அதே பெயர், அதே இனிஷியல் என மொத்தம் 5 ஓ. பன்னீர்செல்வம்கள் சுயேச்சையாக போட்டியிடுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் இந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க ஆகிய பிரதான கூட்டணி கட்சிகள் தேர்தலை எதிர்கொள்கின்றன. அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் மார்ச் 27-ம் தேதியுடன் நிறைவடைந்தது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் என்பதால் இன்று மட்டும் 1000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தென்காசி (தனி) தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் சதுரங்கத்தில் எதிர் வேட்பாளரை வீழ்த்துவதற்கு பல வியூகங்களையும் தந்திரங்களையும் மேற்கொள்வது உண்டு. மக்களைக் குழப்ப, முக்கிய வேட்பாளரின் பெயரில் ஒரே பெயரில் பல வேட்பாளர்களை நிறுத்துவது உண்டு.
அந்த வகையில், தென்காசி தொகுதியில் அ.தி.மு.க சின்னத்தில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமியின் அதே பெயரில் 4 கிருஷ்ணசாமிகள் சுயேச்சை வேட்பாளர்களாக வேட்புமனு தாக்கல் செய்து போட்டியிடுகின்றனர். இப்படி, முக்கிய வேட்பாளரின் பெயரில் பலரும் போட்டியிடுவது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சுயேச்சையாக போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில், அவருடைய அதே பெயரில், அதே இனிஷியல் உடன் 5 ஓ. பன்னீர்செல்வம்கள் ராமநாதபுரம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்து வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள்.
ஜெயலலிதா இருந்தபோது, 2 முறை முதலமைச்சர், ஜெயலலிதா மறைந்த பிறகு ஒருமுறை முதலமைச்சர் என குறுகிய கால முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம், கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி என்று அறிவித்தாலும், பா.ஜ.க அவருக்கு 1 தொகுதிகூட ஒதுக்கவில்லை. இதனால், தன்னை நிரூபிக்க, ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
மேலும், இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் எனவும் அப்படி முடக்கப்பட்டால் தனக்கு பக்கெட் சின்னம் வழங்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஓ.பி.எஸ் மனு அளித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயர் மூலம் வாக்காளர்களை ஈர்த்துவிடலாம் என்று கருதிய ஓ.பி.எஸ்.க்கு தனது பெயரின் வடிவில் புதிய சிக்கல் வந்துள்ளது. ஓ.பி.எஸ் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில், அவருடைய அதே பெயர், அதே இனிஷியல் என 5 ஓ. பன்னீர்செல்வம்கள் சுயேச்சை வேட்பாளர்களாக வேட்புமனு தாக்கல் செய்து ஓ.பி.எஸ்-ஐ எதிர்த்து போட்டியிடுகிறார். ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம், ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம், ஒற்றாத்தேவர் மகன் பன்னீர்செல்வம், ஒய்யாத்தேவர் மகன் பன்னீர்செல்வம் என மொத்தம் 5 ஓ. பன்னீர்செல்வம்கள் போட்டியிடுவதால் வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.