அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுவதால் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து போட்டியிடும் தொகுதிகளையும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவிப்பதிலும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகாவுக்கு 12-13 இடங்களை ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி வந்தார். அதிமுக - தமாகா இடையே இரண்டு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைகளில் இழுபறி நிலவி வந்தது.
இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், தமாகா திரு.வி.க நகர், பட்டுக்கோட்டை, ஈரோடு கிழக்கு, லால்குடி, தூத்துக்குடி, கிள்ளியூர் ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ் மாநில காங்கிரஸ் ஈரோடு கிழக்கு மற்றும் கிள்ளியூர் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியுடன் நேரடியாக மோதுகிறது.
கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தமாகா ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. அதே நேரத்தில், தேர்தலுக்குப் பிறகு, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அதிமுகவால் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனிடையே, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக போட்டியிடும் 6 தொகுதிகளின் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. விசிக, காட்டுமன்னார்கோயில் (தனி), வானூர் (தனி), செய்யூர் (தனி), அரக்கோணம் (தனி) நாகை, திருப்போரூர் ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.