ஏப்ரல் 14, வியாழன் அன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவரது இல்லத்தில் அளிக்கும் ‘தேநீர் விருந்து நிகழ்ச்சியில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிகே மற்றும் சிபிஐ(எம்) ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்தன.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தேநீர் விருந்து நிகழ்ச்சிக்கு ஆளுநர் ஏற்பாடு செய்தார். அன்றைய தினம் ஆளுநர் மாளிகையில், கவிஞர் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் சிலை திறப்பு விழாவும் நடைபெற இருந்தது.
ஆனால் நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாத ஆளுநருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தேநீர் விருந்தை திமுக புறக்கணித்தது.
தமிழக ஆளுநர் தமிழக மக்களை மதிக்க வேண்டும். சட்டசபை ஜனநாயக நெறிமுறைப்படி செயல்படுகிறது. இரண்டாவது முறையாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது ராஜ்பவனில் சிக்கியுள்ளது. எனவே, நாங்கள் விருந்தில் பங்கேற்பது முறையல்ல என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழகத்தில் திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், சிபிஐ(எம்) மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணித்தன.
இதனிடையே, நேற்று மாலை ஆளுநர் மாளிகையில், தமிழ் புத்தாண்டு மற்றும் பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற தேநீர் விருந்தில், அதிமுக, பாஜக, பாமக, தமாக கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஆளுநர் மாளிகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாரதியார் சிலையை, ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். பிறகு பாரதி பிறந்தநாளை முன்னிட்டு, ஆளுநர் மாளிகை சார்பில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில், அதிமுக, பாஜக, பாமக, தமாக கட்சியின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், பாரதியார் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேநீர் விருந்துக்கு பிறகு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த ஜி.கே.வாசன்; பொதுவாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அரசியல் தவிர்ப்பது நல்லது என்பது என்னுடைய கருத்து. மேலும் இணக்கமான, சீரான நிர்வாகத்துக்கு இது உகந்ததல்ல என்று நான் குறிப்பிட விரும்புகிறேன் என்று கூறினார்.
அதிமுக எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் கூறுகையில், மீண்டும் திமுக அரசு நீட் விலக்கு மசோதா கொண்டு வந்து, அதை ஆளுநருக்கு அனுப்பியிருக்கிறது., அந்த மசோதாவை ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதற்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அதனால் தான் நாங்கள் நீட் தேர்வை எதிர்க்கவில்லை. இந்த விழாவில் கலந்து கொள்வது என்பது தமிழருக்கு பெருமை என்பதால் தான் நாங்கள் இதில் கலந்து கொண்டோம் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.