Advertisment

தொண்டர்களை கட்டுப்படுத்தி வச்சிருக்கோம்; இ.பி.எஸ் மீதான வழக்குப் பதிவுக்கு எதிராக அ.தி.மு.க போராட்டம் அறிவிப்பு

இ.பி.எஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, அ.தி.மு.க.,வினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கொதிப்போடு உள்ள தொண்டர்களை நாங்கள் ஆசுவாசப்படுத்தி வைத்துள்ளோம் – ஆர்.பி. உதயகுமார்

author-image
WebDesk
New Update
RP Udayakumar asked if Udayanidhi will talk about 30 thousand crores

ஆர்.பி. உதயகுமார்

மதுரை விமான நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

Advertisment

அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சிவகங்கையில் நடைபெற உள்ள அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் சென்றார். மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி விமான நிலைய பேருந்தில் பயணித்த போது உடன் வந்த சக பயணி ராஜேஸ்வரன் என்பவர் இ.பி.எஸ் குறித்து அவதூறாக பேசி முகநூலில் நேரலை செய்தார்.

இதையும் படியுங்கள்: வன்முறையை தூண்டும் பேச்சு : நா.த.க சீமான் மீது வழக்குப்பதிவு

இதைப் பார்த்த எடப்பாடி பழனிசாமியின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணன் ராஜேஸ்வரனின் செல்போனை பறித்து அவரை விமான நிலைய வளாகத்தில் சட்டை பிடித்து இழுத்து வந்தார். ராஜஸ்வரனை அங்கிருந்து அ.தி.மு.க-வினர் சிலர் தாக்கிய வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இ.பி.எஸ்-ஐ அவதூறாக பேசிய சிங்கம்புணரியைச் சேர்ந்த ராஜேஸ்வரனை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவர் மீது புகார் எதுவும் அளிக்கப்படாததால், போலீசார் அவரை விடுவித்தனர். இதைத் தொடர்ந்து, சனிக்கிழமை இரவு (மார்ச் 11) திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ராஜன் செல்லப்பா, ராஜேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் உதவி ஆணையர் சசிகுமாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில், நேரலை செய்த ராஜேஸ்வரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, ராஜேஸ்வரனும் முகநூலில் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய போது, அவரது நேர்முக உதவியாளர் கிருஷ்ணன் தன்னை தாக்கி செல்போனை பறித்ததாகவும், எடப்பாடி பழனிசாமி தூண்டுதலின் பேரில் அவரது உதவியாளர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தகாத வார்த்தைகளால் பேசி தன் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் காவல் துறையில் புகார் அளித்தார். ராஜேஸ்வரன் அளித்த புகாரின் பேரில், எடப்பாடி பழனிசாமி, அவரது நேர்முக உதவியாளர் கிருஷ்ணன்,எம்.எல்.ஏ செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், மதுரை விமான நிலைய சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மீது காவல்துறை பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் மதுரை கோரிப்பாளையம் அ.தி.மு.க அலுவலகத்தில் வழக்கறிஞர் குழுவுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் மூவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்து, எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து மதுரையில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறுகையில், மதுரை விமான நிலையத்திற்குள் பேருந்தில் வரும்போது, மோசமான கிரிமினல் ஒருவர் எடப்பாடி பழனிசாமியை பற்றி அசிங்கமாகப் பேசினார். அதையும் பொறுமையாக கேட்டுக்கொண்டு எடப்பாடி பழனிசாமி அமைதியாகவே வந்தார். தொடர்ந்து அவர் கூச்சல் போட்டபோதும் எடப்பாடியார் அமைதியாகவே இருந்தார். விமான நிலையத்திற்குள் நடந்த சம்பவம் குறித்து எங்களுக்கே தெரியாது. ஒரு எதிர்க்கட்சித் தலைவரை, மக்கள் செல்வாக்கு பெற்றவரை திட்டமிட்டு வழக்கில் சேர்த்து பொய்யான குற்றச்சாட்டை காவல்துறை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான வழக்கை பதிவு செய்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் துணிச்சலாக இந்த வழக்கை போட்டுள்ளார். எடப்பாடியார் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூடுவதால் இந்த அராஜத்தை அரங்கேற்றி உள்ளனர். இ.பி.எஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, அ.தி.மு.க.,வினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கொதிப்போடு உள்ள தொண்டர்களை நாங்கள் ஆசுவாசப்படுத்தி வைத்துள்ளோம். அரசாங்கம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். நாங்கள் சொன்னதால் அ.தி.மு.க.,வினர் அமைதியாக உள்ளனர்.

இ.பி.எஸ் மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து பழங்காநத்தம் பகுதியில் உள்ள ஜெயம் தியேட்டர் அருகில் நாளை காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அ.தி.மு.க வழக்கறிஞர்கள் குழு சார்பில், ஆளுநர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி, தென்மண்டல ஐ.ஜி ஆகியோருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித்தலைவருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? ரவுடிகளுக்கு ஆதரவாக தி.மு.க அரசின் காவல்துறை உள்ளது.

அ.தி.மு.க.,வினர் அந்த நபரைத் தாக்கியது குறித்து எங்களுக்கு தெரியாது. எங்கள் எல்லைக்குள் நடந்ததால் கொந்தளிப்போடு பேசுகிறோம். அந்த நபர் தரக்குறைவாக நடந்தபோதும், எடப்பாடி பழனிசாமி கண்ணியக் குறைவாக நடக்கவில்லை. குற்றவாளி கொடுத்த புகாரை வைத்து வழக்குப் போடுவதைப் பார்த்தாலே சட்டம் எப்படி இருக்கிறது என்பது தெரியும். தனிநபர் தாக்குதலை எந்தவொரு மனசாட்சி உள்ள நபரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Admk Madurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment