விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். இதனால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து, அரசியல் கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் வேட்பாளராக டாக்டர் அபிநயா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க வேட்பாளராக சி.அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூன் 15) நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க புறக்கணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தி.மு.க அரசின் அமைச்சர்களும், தி.மு.க.,வினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாடு, பண பலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் கட்டவிழ்த்துவிட்டு மக்களை சுதந்திரமாக ஓட்டளிக்க விடமாட்டார்கள். தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது. இதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க புறக்கணிக்கிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“