எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் நடுநிலையோடு செயல்படவில்லை எனக் கூறி, அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒற்றைத் தலைமை கோரிக்கையால் அ.தி.மு.க ஓ.பி.எஸ் தரப்பு இ.பி.எஸ் தரப்பு என இரண்டாகப் பிரிந்துள்ளது. இருபக்கமும் மாறி மாறி நீக்கங்களும், புதிய பொறுப்புகளும் வழங்கப்பட்டது. அதில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருக்கும் ஓ.பி.எஸ்-ஐ நீக்கி ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக இ.பி.எஸ் அறிவித்தார். இது தொடர்பாக சபாநாயகரிடம் கடிதமும் அளிக்கப்பட்டது. அதேநேரம் ஓ.பி.எஸ் தரப்பிலும் கடிதம் அளிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: டிச.4ம் தேதியே மரணித்தாரா ஜெயலலிதா? ஆறுமுகசாமி ஆணையம் தகவல்
இந்தநிலையில், இன்று கூடிய சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க கூறி இ.பி.எஸ் தரப்பு அ.தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் கோஷங்கள் எழுப்பினர்
சட்டப்பேரவை விதிகளைக் கூறி, சபாநாயகர் அங்கீகரிக்க மறுத்ததால், அ.தி.மு.க உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.
இந்தநிலையில், எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் நடுநிலையோடு செயல்படவில்லை எனக் கூறி, அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நாளை காலை 10 மணிக்கு அ.தி.மு.க சார்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil