தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமியா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் மௌனம், சம்மதம் என்றுதான் அர்த்தம் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக விவசாயிகளுடன் காணொலி காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இரு தினங்களுக்கு முன்பு சென்னை வந்தார்.
மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் அக்கட்சியிலிருந்து விலகி, பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் கமலாலயத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெற்றிவேல் வீரவேல் " என்ற கோஷத்தை மக்களிடையே கொண்டு சென்ற தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்களுக்கு என் பாராட்டுக்கள் என்று தெரிவித்தார். மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமியா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பிரகாஷ் ஜவடேகர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து விரைவில் பாஜக தலைமை விரைவில் அறிவிக்கும், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தான் எடப்பாடி பழனிசாமி என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
இந்நிலையில், மதுரை பழங்காநத்தம் பகுதியில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, " பாஜக போன்ற அகில இந்தியக் கட்சி மாநில கட்சிகளோடு கூட்டணி வைக்கும்போது, முதல்வர் வேட்பாளர் பெயரை அகில இந்தியக் கட்சியின் தலைமை தான் முறைப்படி அறிவிக்கும்" என்று தெரிவித்தார்.
ஆனால், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இதற்கு நேர் எதிரான கருத்தை பதிவு செய்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், " அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைந்துள்ளது; எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர். அதை மீறி எதுவும் நடக்காது" என்று தெரிவித்தார்.
மேலும், முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை வரும் சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பவர்கள் மட்டுமே அஇஅதிமுக கூட்டணியில் தொடர முடியும் " என்றும் தெரிவித்தார்.
2021ம் ஆண்டு தேர்தலில் திரு.ஹெச்.ராஜாவை சட்டமன்ற உறுப்பினராக்கி தமிழக அமைச்சராக்க உள்ளோம்! சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் பாஜக கைகாட்டும் நபரை சட்டமன்ற உறுப்பினராக்குங்கள்! என்று மாநில துணைத்தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்தார்.