அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தல், பொதுக் குழு தீர்மானங்கள் தொடர்பாக தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
அ.தி.மு.கவில் ஒற்றை தலைமை விவகாரம் உட்கட்சி பூசல் ஆனதை அடுத்து ஜூலை 11-ம் தேதி சென்னை வானகரத்தில் பொதுக்குழு நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் அதிமுக பொதுச் செயலாளராக இ.பி.எஸ் தேர்வு செய்யபப்ட்டார். ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்ததில் பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து பொதுக் குழு தீர்மானங்கள், அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து ஓ.பி.எஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என தனி நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பளித்தார். இதையடுத்து அ.தி.மு.க பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.
தனி நீதிபதி தீர்ப்பையடுத்து ஓ.பி.எஸ் உடனடியாக இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தார். ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகரன் ஆகியோர் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் ஓ. பன்னீர் செல்வம் தரப்பு மனு மட்டும் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. தனி நீதிபதியின் சான்றளிக்கப்பட்ட நகல் கிடைக்காததால் அந்த நகல் இல்லாமலே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மற்ற மனுதாரர்கள் தரப்பில் கேட்டகப்பட்டது.
இதையடுத்து வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மற்ற வழக்குகளையும் சேர்த்து இன்று விசாரணை செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கை இன்று விசாரணை செய்ய ஒப்புக்கொண்டனர். இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“